சிறுவாணி தடுப்பணை விவகாரம்… கேரளாவை தடுத்து நிறுத்துமா தமிழக அரசு..? அமைச்சர் கேஎன் நேரு சொன்ன தகவல்!!

Author: Babu Lakshmanan
8 May 2023, 11:51 am
Quick Share

கோவை ; சிறுவாணி தடுப்பணை விவகாரம் தொடர்பாக நீர்வழித்துறை அமைச்சர் நீதிமன்றம் செல்ல நடவடிக்கை எடுத்து வருவதாக கோவையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் ரூ.1010.19 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு – மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் துவங்கி வைத்தனர். முதலில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் பந்தய சாலையில் ரூ.40.67 கோடி மதிப்பீட்டில் மாதிரி சாலைகள் அமைத்தல் பணியை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

இதைத்தொடர்ந்து, வ.உ.சி மைதானத்தில் புதிய திட்டப் பணிகள் துவக்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பல்வேறு திட்ட பணிகள் துவங்கப்பட்ட நிலையில், குறிப்பாக தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் ரூ.1.72 கோடி மதிப்பீட்டில் 2 எண்ணிக்கையிலான சாலையில் தேங்கும் மணல் குப்பைகளை அகற்ற செய்யும் வாகனங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்குவது, தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் ரூ.7.86 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு 105 எண்ணிக்கையிலான இலகுரக வாகனங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்குதல், மாநகராட்சி பொது நிதியின்கீழ் ரூ.2.53 கோடி மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு 100 எண்ணிக்கையிலான பேட்டரி வாகனங்கள் வழங்குதல், நமக்கு நாமே திட்டத்தின்கீழ் 2023-24 ஆண்டு ரூ.96 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள காசோலை வழங்குதல் போன்ற பணிகள் துவங்கப்பட்டது.

அதேபோல வடவள்ளி, வீரகேரளம், கவுண்டம்பாளையம், துடியலூர் போன்ற பகுதிகளுக்கு ரூபாய் 860.80 கோடி மதிப்பீட்டில் பாதாளை சாக்கடை திட்டப் பணி அடிக்கல் நாட்டுதல், வெள்ளலூர் பேரூராட்சியில் ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை திறந்து வைத்தல் போன்றவையும் நடைபெற்றது.

நிகழ்வுக்கு பின்பு அமைச்சர் நேரு செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், “1010.19 கோடி மதிப்பில் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. சிறுவாணி அணையில் தடுப்பணை கட்டப்படுவது தொடர்பாக முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

கேரளா அரசுக்கு நாங்களும் இயக்கத்தை சேர்ந்த தோழர்களிடம் சொல்லியுள்ளோம்.
கேரளாவில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி வருகிற பணிகள் அனைத்திற்கும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. சிறுவாணி தடுப்பணை விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் நீதிமன்றம் செல்ல நடவடிக்கையும் எடுத்து வருகிறார், என இவ்வாறு தெரிவித்தார்.

Views: - 274

0

0