தமிழக கிரிக்கெட் சங்கத் தலைவராக அமைச்சரின் மகன் தேர்வு ; எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்தவர் திடீரென வாபஸ்..!!

Author: Babu Lakshmanan
5 November 2022, 5:55 pm
Quick Share

தமிழக கிரிக்கெட் சங்கத் தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் அதிகாரமும் பலமும் மிக்க இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீநிவாசன் அணியை சேர்ந்தவர் அசோக் சிகாமணி. இன்று தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்த பிரபு தனது மனுவை வாபஸ் பெற்று தேர்தலில் இருந்து ஒதுங்கினார். இதையடுத்து போட்டியின்றி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வானார் அசோக் சிகாமணி.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளராக பழனியும், பொருளாளராக ஸ்ரீனிவாச ராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களும் போட்டியின்றியே தேர்வு செய்யப்பட்டனர். பிரபு தலைமையிலான எதிரணி போட்டியாளர்கள் அனைவரும் வாபஸ் பெற்றதால் செயலாளர், பொருளாளரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

2019ம் ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீநிவாசன் மகள் ரூபா தேர்வு செய்யப்பட்டார். நீண்டகாலமாக கிரிக்கெட் சங்கங்களுடன் நெருங்கிய தொடர்பில் முக்கியமான பொறுப்புகளில் இருந்துவரும் அசோக் சிகாமணி, அப்போதே தலைவர் பதவிக்கு முயற்சி செய்தார். ஆனால் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி சரிகட்டி, அவரை துணைத்தலைவராக்கினார் ஸ்ரீநிவாசன். இப்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளார் அசோக் சிகாமணி.

Views: - 188

0

1