12 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை முடிவுகளை வெளியிட உத்தரவு : அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

17 September 2020, 1:00 pm
Cbe Sp Velumani Help - Updatenews360
Quick Share

கோவை : கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 12 மணிநேரத்திற்குள் முடிவுகளை வெளியிட வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, பரிசோதனை மையங்களை தமிழக அரசு அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களுக்கும் கொரோனா பரிசோதனைகளை செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சில தனியார் மருத்துவமனைகள் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகவும், பரிசோதனை முடிவுகளை வழங்குவதில் கால தாமதம் ஏற்படுத்துவதாகவும் அடுக்கடுக்கான புகார்கள் வந்தன. தமிழக அரசும் இது தொடர்பாக தனியார் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், அதிக கட்டணம் வசூலித்தால், பரிசோதனை செய்வதற்கான உரிமை வாபஸ் பெறப்படும் என தெரிவித்திருந்ததது.

இந்த நிலையில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 12 மணிநேரத்திற்குள் முடிவுகளை வெளியிட வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கோவையில் #COVID19 பாதிப்பை தடுக்கும் நோக்கில், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தனியார் ஆய்வகங்கள், பரிசோதனை முடிவுகளை 12 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும். இதில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால் அவர்கள் மருத்துவமனைக்கு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்

மேலும், உடனடியாக நோய் பாதிக்கப்பட்டோரின் தொடர்பு விவரங்களை சுகாதாரத் துறை & கோவை மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும். இதற்கு தனியார் பரிசோதனை ஆய்வகங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 27

0

0