ஆர்டிபிசிஆர் கருவிகள் கையாண்டதில் முறைகேடு நடந்துள்ளதா…? : ஆய்வு செய்ய மருத்துவத் துறை செயலாளருக்கு உத்தரவு
Author: kavin kumar17 August 2021, 10:00 pm
ஆர்.டி.பி.சி.ஆர். கருவிகள் கையாண்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதா என ஆய்வு செய்யும்படி தமிழ்நாடு மருத்துவத் துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சி.முத்துக்குமார் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக 64 கோடி ரூபாய் அளவிற்கு ஆர்டிபிசிஆர் கருவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் நாளொன்றுக்கு 1500 முதல் 2000 மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மூன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு கருவியில் 4 மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், ஒரு கருவி மூலம் ஒரு மாதிரி எடுக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் 5 கோடி ரூபாய் அளவிற்கான கருவிகள் காலாவதியாகிவிட்டதாகவும், அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து விசாரிக்க அரசுக்கு உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பரிசோதனை கருவிகள் கையண்டதில் முறைகேடுகள் இருப்பது பேராபத்து என தெரிவித்த நீதிபதிகள், மருத்துவத் துறை செயலாளர் உடனடியாக ஆய்வு செய்ய உத்தரவிட்டனர். அந்த ஆய்வில், முறைகேடுகளோ, குறைபாடுகளோ கண்டறியப்பட்டால், உடனடி நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு அரசிற்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
0
0