மக்களவைத் தொகுதி குறைப்பா? ஸ்டாலின் அழைப்பு.. அதிமுக, பாஜகவின் நிலைப்பாடு என்ன?

Author: Hariharasudhan
25 February 2025, 2:57 pm

தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், தமிழகத்தில் 31 தொகுதிகள்தான் இருக்கும். 8 தொகுதிகளை இழக்க வேண்டியச் சூழல் ஏற்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது.

வருகிற மார்ச் 5ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து கட்சிகளுக்கு கடிதம் அனுப்பப் போகிறோம். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில், தென்னிந்தியாவிற்கு மேல் மிகப்பெரிய கத்தி தொங்கிக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. அதனைக் குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு 2026ஆம் ஆண்டு, மக்களவைத் தொகுதியை மறுசீரமைப்பு செய்ய இருக்கிறது. பொதுவாக இது மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தான் செய்யப்படுகிறது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துவது என்பது இந்தியாவின் மிக முக்கியமான இலக்கு. அந்த இலக்கில் தமிழ்நாடு வெற்றி பெற்றுள்ளது.

MK Stalin

தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், தமிழகத்தில் 31 தொகுதிகள்தான் இருக்கும். 8 தொகுதிகளை இழக்க வேண்டியச் சூழல் ஏற்படும். நாட்டில் ஒட்டுமொத்த எம்பிக்களின் எண்ணிக்கையை உயர்த்தி, அதற்கேற்ப பிரித்தாலும் நமக்கு இழப்புதான் ஏற்படும். அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும்.

இதனால் தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும். இது உறுப்பினர்களின் எண்ணிக்கையை மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்தது. தமிழகத்தில் அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்து, இந்த விவகாரத்தில் குரல் கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், இது தொடர்பாக தனியார் செய்தி ஊடகத்திடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு சீரமைப்பு என்பதை ஏற்க முடியாது. அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதா, இல்லையா என்பது குறித்து அதிமுக ஆலோசித்து அறிவிக்கும். வடக்குக்கு ஒரு நீதி, தெற்குக்கு ஒரு நீதி என்பது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், திமுக உடன் கூட்டணியில் உள்ள காங்கிரஸின் மாநிலத் தலைவரும், எம்எல்ஏவுமான செல்வப்பெருந்தகை, “மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை தமிழ்நாடு சரியாக பின்பற்றியது” எனக் கூறி, தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தி வாலாக்களாக மாற்ற முயற்சி.. திருமாவளவன் கடும் விமர்சனம்!

மேலும், பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், “மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரிப்பதால் எந்த மாநிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படாது” எனக் கூறினார்.

அதேபோல், பாஜக உடன் கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், “சட்டம் – ஒழுங்கு பிரச்னையைக் கையாள முடியாததால் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை” எனக் கூறியுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!