கோவையில் ரூ.24.36 கோடி மதிப்பில் மாதிரி சாலை அமைக்கும் பணி : மாநகராட்சி ஆணையர் ஆய்வு

30 September 2020, 2:13 pm
Corporation Commissioner - updatenews360
Quick Share

கோவை : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.24.36 கோடி மதிப்பீட்டில் ஆர்.எஸ்.புரத்தில் மாதிரி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, ரூ.24.36 கோடி மதிப்பீட்டில் மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் திவான் பகதூர் சாலையில், சுக்ரவார்பேட்டை ரோடு சந்திப்பு முதல் கௌலிபிரவுன் ரோடு வரை மாதிரி சாலை அமைக்கும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணிகள், மின்சார புதைவடம், கேபிள்கள், 24 மணி நேர குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள், தொலைதொடர்பு கேபிள் அமைத்தல், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், இருபுறமும் பாதசாரிகள் நடைபாதைகள், அலங்கார தெரு விளக்குகள் அமைக்கும் பணிகள், ஒளிரும் விளம்பர பலகைகள் அமைக்கும் பணிகள் ஆகிய பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, சாலை ஓரங்களில் இருபுறங்களிலும் கடைகளின் முன்பு சாக்கடை கழிவுநீர் செல்லும் கால்வாய்களில் நீர்தேங்காமலும் மற்றும் கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் கொசு மருந்துகளை தெளிக்கப்பட வேண்டும் என சுகாதார அலுவலர்களிடம் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது மாநகரப்பொறியாளர் லட்சுமணன், தமிழ்நாடு மின்சாரவாரிய செயற்பொறியாளர் வைதீஸ்வரன், நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Views: - 7

0

0