ஜோசியத்தால் பறிபோன உயிர்கள்: மனநலம் குன்றிய மகளுக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை…கோவையில் சோகம்..!!

Author: Aarthi Sivakumar
6 January 2022, 4:33 pm
Quick Share

கோவை: துடியலூரில் மனநிலை பாதிக்கப்பட்ட மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை துடியலூர் அப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு சசிக்குமார் என்ற மகனும் மனநிலை பாதிக்கப்பட்ட சுகன்யா என்ற மகளும் உள்ளனர்.

சசிகுமார் ஏற்கனவே திருமணமாகி தனியாக வசித்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். வீட்டில் தனது மகளுடன் வசித்து வந்த தனலட்சுமி நேற்றிரவு தனது மகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அதில் தனலட்சுமி ஜோசியம் பார்த்ததாகவும் அதில் அவருக்கு கைகால்கள் வராமல் போய்விடும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் தனது மகனிடம் ‘நாங்கள் இருப்பது உனக்கும் பிரச்சினையாக உள்ளது என்றும் தங்கையை கவனிக்க ஆளில்லாமல் போய்விடும்’ என்றும் கூறியுள்ளார்.

இதனையடுத்து, இன்று காலை சுகன்யாவுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த தனலட்சுமி வீட்டில் தூக்கு மாட்டி தானும் தற்கொலை செய்து கொண்டார். இதைதொடர்ந்து, தனலட்சுமியின் மகன் சசிகுமார் அளித்த புகாரின் பேரில் துடியலூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனநலம் பாதிக்கப்பட்ட மகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 316

0

0