பவானி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்.. நீரில் மூழ்கிய தாய், மகள், பேத்தி : 11 வயது குழந்தை மீட்பு.. துவைக்க சென்ற போது சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 August 2021, 8:10 pm
Bhavani River -Updatenews360
Quick Share

கோவை : மேட்டுப்பாளையம் பவானியாற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி தாய்,மகள் பலியான நிலையில் 11 வயது குழந்தையை பரிசலில் மீன் பிடிக்க சென்றவர்கள் உயிருடன் காப்பாற்றினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கோவிந்தசாமி நகரைச் சேர்ந்தவர் ஜெயகாந்தன் (வயது 35). இவருக்கு கவிதா (வயது 30) என்ற மனைவியும் சாதனா (வயது 11) என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கவிதா தனது தாய் சங்குபதி (வயது 50) மற்றும் மகளுடன் இன்று மதியம் துணிகளை துவைப்பதற்காக உப்புப்பள்ளம் மீன் பண்ணை அருகே பவானி ஆற்றிற்கு சென்றுள்ளனர்.

துணிகளை துவைப்பதற்காக இறங்கிய பொழுது சமயபுரம் மின் தடுப்பணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. அப்போது,பவானியாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிறுமி சாதனா ஆற்று நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளார். சிறுமியை காப்பாற்ற தாயும்,மகளும் நீரில் குதித்துள்ளனர்.

இதில் சிறுமி சாதனா சாமண்ணா வாட்டர் டேங்க் அருகே நீரில் மிதந்த படி காப்பாற்றும் படி கூச்சலிட்டுள்ளார். அருகில் பரிசலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்கள் விரைந்து சென்று சிறுமியை அதிர்ஷ்டவசமாக பத்திரமாக உயிருடன் மீட்டனர்.

தாயும், மகளும் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் அன்னூர் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து நீரில் மூழ்கியபடி தேடி சில மணி நேரத்தில் தாய் சங்குபதியின் சடலத்தை சாமண்ணா வாட்டர் டேங்க் அருகிலேயும் சற்றுநேரம் கழித்து மகள் கவிதாவின் சடலத்தையும் ரயில்வே கேட் அருகேயும் சடலமாக மீட்டனர்.

இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் காவல் துறையினர் விரைந்து வந்து இருவரது சடலத்தையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும்,இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பவானியாற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கிய சிறுமியை மீட்க நீரில் குதித்த தாயும், மகளும் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 183

0

0