கர்ப்பிணி பெண்ணை அடித்து கொடுமைப்படுத்திய மாமியார்! காவல் நிலையம் முன்பு தர்ணா.!!

12 August 2020, 3:50 pm
Trichy Lady Protest - Updatenews360
Quick Share

திருச்சி : கர்ப்பிணி மகளை கொடுமைப்படுத்திய மருமகன் குடும்பத்தினர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, காவல் நிலையம் முன்பு பெண்ணின் தாய் தனது மகள்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை மஸ்தான் தெருவில் வசித்து வருபவர் ஹேமபாரதி. இவர் கடந்த ஓராண்டுக்கு முன்னதாக அதே பகுதியினை சேர்ந்த தினேஷ் என்பவரை காதலித்து தனது குடும்பத்தினரை எதிர்த்து திருமணம் செய்துள்ளார்.

தினேஷ் நகராட்சியில் ஒப்பந்த அடைப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். ஹேமபாரதி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தினேஷ் மது அருந்திவிட்டு வந்து, வீட்டில் உள்ள ஹேமபாரதியை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.

அடித்ததற்கு காரணம் கேட்டால் மாமியார் குடும்பத்தினரும் சேர்ந்து அடித்ததாகவும், தகாத வார்த்தைகளை பேசி வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. மேலும் மாமியார் குடும்பத்தினர் தாக்கியதில் ஹேமபாரதி மணப்பாறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் தனது தாய் மல்லிகா வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதுகுறித்து மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் கடந்த சில நாட்களாக எந்த நடவடிக்கையும் இல்லை என கூறி ஹேமபாரதி தனது தாய் மல்லிகாவுடன் இன்று அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் சென்றுள்ளார். அங்கு காவல்நிலையத்தில் குடும்ப பிரச்சனை என்பதால் காவல் ஆய்வாளர் சமரசம் செய்துள்ளார்.

இதை ஏற்காத ஹேமபாரதியின் தாய் மல்லிகா தனது 17 மற்றும் 14 வயது மகள்களுடன் காவல்நிலையம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. இச்சம்பவம் குறித்து அனைத்து மகளிர் காவல்துறையினர் தினேஷ் மற்றும் அவரது சகோதரர், மாமியார் மீது வரதட்சணை கொடுமை பிரிவு கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Views: - 7

0

0