உங்களை கேட்டு தான் ஆட்சி நடத்தணுமா..? உங்க பேச்ச நீங்களே ரசியுங்க : அண்ணாமலை குறித்து எம்பி திருநாவுக்கரசு காட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 May 2022, 7:43 pm

திருச்சி : பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை கேட்டு கொண்டு ஆட்சி நடத்த முடியாது. அவர் பேசியதை அவரே ரசிக்க வேண்டியது தான் என திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் காட்டமாக பேசியுள்ளார்.

பாதுகாப்பு துறைக்கு சொந்தமான நிலம் ஒதுக்குவது தொடர்பான பிரச்சனையில் திருச்சியில் கடந்த 8ஆண்டுகளாக அரிஸ்டோ மேம்பால பணி முழுமையடையாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பாதுகாப்பு துறைக்கு சொந்தமான 66 சென்ட் இடத்தை மத்திய அரசு அந்த பாலப்பணிக்காக ஒதுக்கியது.

தற்போது அந்த பாலம் கட்டுவதற்கான தொடக்க பணிகள் துவங்கியது. அதனை திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 8 ஆண்டுகளாக மேம்பால பணி நிறைவடையாமல் இருந்தது. நான் மக்களவை தேர்தலில் போட்டியிடும் போது அரிஸ்டோ மேம்பால பணியை நிறைவு செய்ய நடவடிக்கை எடுப்பேன் என கூறி இருந்தேன்.

அதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் அதிகாரிகளை தொடர்ந்து சந்தித்து பேசினேன். தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் முயற்சி செய்தனர்.

ஏற்கனவே இருந்த திருச்சி எம்.பி, முன்னாள் அமைச்சர்களும் முயற்சி செய்தனர். தற்போது அந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் நான்கு முதல் ஐந்து மாதங்களுக்குள் பணிகள் நிறைவடையும்.

இன்னும் 30 ஆண்டுகளுக்கு பாஜக தான்‌ ஆட்சி செய்யும் என பிரசாத் கிஷோர் பேசியது குறித்த கேள்விக்கு, பாஜகவின் ஆதிக்கம், 30 ஆண்டுகளுக்கு இருக்கும் என்று சொல்லும் பிரசாந்த் கிஷோர் ஒன்றும் மந்திரவாதி இல்லை. அவர் காங்கிரசில் இணையாமல் இருப்பதே அவருக்கும் நல்லது கட்சிக்கும் நல்லது.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிப் பெறும்.
எந்த ஒரு அரசும், சாம்ராஜ்யமும் நிலையாக தொடர்ந்து இருந்தது இல்லை. ராஜபக்சே சகோதரர்களை இலங்கை மக்கள் கொண்டாடினார்கள். ஆனால் இன்று அந்த மக்களுக்கு பயந்தே மஹிந்த ராஜபக்சே ஓடுகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்.

பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை கேட்டுக்கொண்டு ஆட்சி நடத்த முடியாது. மக்களுக்கு என்ன தேவை என்பதை அரசாங்கம் முடிவெடுக்கும் அதை மக்கள் ஏற்பார்களே தவிர அண்ணாமலை எடுக்கும் முடிவை மக்கள் ஏற்க மாட்டார்கள். அண்ணாமலை பேசுவதை அவரே ரசித்து கொள்ள வேண்டியது தான் என தெரிவித்தார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?