பல கோடி ரூபாய் மோசடி : UNIVERSAL TRADING SOLUTION உரிமையாளருடன் கேரளாவுக்கு விரைந்த தனிப்படை!!

17 September 2020, 4:56 pm
Mosadi Arrest - updatenews360
Quick Share

கோவை : யுனிவர்சல் டிரேடிங் சொல்யூசன் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்தவனை போலீசார் கைது செய்து கேரளாவிற்கு அழைத்து சென்றனர்.

கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த கெளதம் என்பவர் பீளமேடு பகுதியில் யுனிவர்சல் டிரேடிங் சொல்யூசன் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார். இதன் கிளை நிறுவனங்களை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கேரளா கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் நடத்தி வந்தார்.

இவர் நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் ஒரே ஆண்டில் நான்கு லட்சம் கிடைக்கும்’ என்று விளம்பரம் செய்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் நிறுவனத்தில் பலரும் முதலீடு செய்தனர். கடந்த ஆண்டு இவர் தலைமறைவான நிலையில் கோவை பீளமேடு பகுதியில் உள்ள இவரின் நிறுவனத்தை முதலீடு செய்த மக்கள் முற்றுகையிட்டனர்.

இதனை தொடர்ந்து பீளமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவாகிய கெளதமை தனிப்படை அமைத்து தேடிவந்தனர். கேரளாவிலும் இவர் மீது வழக்கு பதிவு செய்து கேரள காவல்துறையினர் இவரை தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த கெளதமை கடந்த 12ம் தேதி தனிப்படை போலீஸார் சேலத்தில் கைது செய்தனர்.

இது குறித்து தகவலறிந்த கேரள போலீஸார் டி.எஸ்.பி சியாம்ஸ் தலைமையில் சேலத்தில் கைதான கெளதமை கோவைக்கு அழைத்து வந்து பீளமேட்டில் உள்ள அவரது நிறுவனத்தில் இருந்து கணினி ஆவணங்கள் கோப்புகள் போன்றவற்றை கைபற்றி கெளதமை கேரளாவிற்கு அழைத்து சென்றனர்.

Views: - 0

0

0