மாயமான 16 வயது சிறுமி.. கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு : வசமாக சிக்கிய திமுக கவுன்சிலர்.. விசாரணையில் பகீர்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 May 2023, 5:11 pm
Minor Girl - Updatenews360
Quick Share

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சவாரிமேடு கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு – கலைவாணி தம்பதியர். இவர்களுக்கு விக்னேஸ்வரி, தேவிகா ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். கலைவாணி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.

தங்கராசு 15 வருடங்களுக்கு முன்பு தனது மனைவி, மகள்களை விட்டு பிரிந்து சென்று விட்டார். இளைய மகள் தேவிகா (16). நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டம்பட்டியில் அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு தற்போது கடந்த ஒரு ஆண்டாக வீட்டில் இருந்து தனது அக்காளுடன் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.

தேவிகா வீட்டின் அருகே குடியிருக்கும் திமுக வார்டு கவுன்சிலர் குணசேகர் மகன் கஜேந்திரன் தேவிகாவை கடந்த ஒராண்டாக காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கஜேந்திரன் வீட்டிற்கு தெரியவரவே தேவிகா குடும்பத்தாரை கஜேந்திரனின் உறவினர்கள் எச்சரித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதி அன்று இரவு வீட்டில் இருந்த தேவிகாவிற்கு கஜேந்திரன் செல்போனில் இருந்து அழைப்பு வந்ததை அடுத்து இரவு 11 மணி அளவில் வீட்டிலிருந்து தனது அக்கா விக்னேஸ்வரி துணையுடன் 30 மீட்டர் தொலைவில் உள்ள கஜேந்திரன் வீட்டை நோக்கி சென்றுள்ளனர்.

அப்போது கஜேந்திரன் வீட்டின் கேட் அருகே சிலர் தேவிகாவை முடியை பிடித்து உள்ளே இழுத்ததாகவும், வின்னேஸ்வரியை இழுக்க முயற்சித்தபோது அங்கிருந்து தப்பித்து வீட்டிற்கு வந்துள்ளார்.

பிறகு 12 மணி அளவில் தேவிகாவின் தாயார் மற்றும் பாட்டியான தைலம்மாள் மற்றும் உறவினர்களுடன் அப்பகுதியில் தேடி உள்ளனர். மேலும் கஜேந்திரன் வீட்டிலும் விசாரித்தபோது, எங்கள் வீட்டிற்கு வரவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மறுநாள் 25ஆம் தேதி குளித்தலை காவல் நிலையத்தில் தேவிகா காணவில்லை எனவும் கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்துள்ளனர்.

இந்த நிலையில் மறுநாள் காலை 26 ஆம் தேதி அதிகாலை வீட்டின் அருகே உள்ள குஞ்சப்பன் என்ற விவசாயி கிணற்றில் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதைப் பார்த்த அப்பகுதியினர் குளித்தலை போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முசிறி தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றில் சடலமாக கிடந்த தேவிகா உடலை மீட்டனர்.

தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் குளித்தலை போலீசார் தற்கொலை என வழக்குபதிவு செய்ததை அறிந்த தேவிகா உறவினர்கள் உடலை வாங்க மறுத்து திருச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டம் செய்துள்ளனர்.

சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மறுத்து வந்தனர். இந்தநிலையில் இன்று காலை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்தநிலையில் தேவிகா காணாமல்போய் 4 நாட்களுக்கு பிறகு நங்கவரம் பேரூராட்சி திமுக வார்டு கவுன்சிலரும் வரிவிதிப்பு நியமனக்குழு உறுப்பினருமான குணசேகர் (53), இவரின் மகன் கஜேந்திரன் (18), குணசேகரின் மைத்துனர் முத்தையன் (51) ஆகிய 3 பேரை பிடித்த போலீசார் வழக்குபதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Views: - 198

0

0