சக நண்பர்களுடன் விளையாட கல்லூரி விடுதிக்கு சென்ற மாணவன் மர்ம மரணம்!!
27 August 2020, 3:34 pmதிருப்பூர் : அரசு கல்லூரி மாணவர் விடுதியில் இளைஞர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் கல்லூரி சாலையில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது . கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விடுதியில் இருந்த மாணவர்களும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விடுதியில் மாணவர்கள் மற்றும் பாதுகாவலர் யாரும் இல்லாத சூழ்நிலையில் இன்று காலை கல்லூரி விடுதியின் 11 வது அறையில் இளைஞர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த இளைஞர் மாஸ்கோ நகர் பகுதியை சேர்ந்த 28 வயதான அருண்குமார் என்பதும் நண்பர்களுடன் கல்லூரி விடுதியின் பின்பக்கமாக வந்து விடுதி அறையில் விளையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்து அதன் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.