பல கோடியை சுருட்டிவிட்டு கட்சியில் இருந்து விலகிய முக்கிய பிரமுகர் : நாம் தமிழர் நிர்வாகி குற்றச்சாட்டு!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2024, 3:55 pm

கிருஷ்ணகிரி நாம் தமிழர் கட்சியின் நடுவண் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள், 20க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரியில் பேட்டி அளித்தனர்.

அப்போது அவர் கூறுகையில், கிருஷ்ணகிரி நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் கடந்த வாரத்தில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, கட்சியிலிருந்து விலகுவதாக கூறினார்.

ஆனால் அவருடன் வந்த யாரும் எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை. ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், 50 ஓட்டுச்சாவடிக்கு ஒரு பொறுப்பாளர் என கட்சியில் பலருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொள்ள முடியாத கரு. பிரபாகரன், தான் கட்சி பெயரை கூறி சம்பாதிக்க முடியவில்லை என்ற ஆதங்கத்தில் பேசியுள்ளார் என்றார்.

அவர், கோழிப்பண்ணை, உள்அரங்குகள் மற்றும் சீட்டு நடத்துவதாக கூறி நிர்வாகிகளிடம் பல லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றினார். ‘கிரிப்டோ கரன்சி’யில் முதலீடு செய்தால் அதிக லாபம் எனக்கூறி, நிர்வாகிகள் மற்றும் பல மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களிடம் 5 கோடி ரூபாய் அளவிற்கு வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து, அவர் மீது, 15க்கும் மேற்பட்டோர் புகாரளித்தும் போலீசார் வழக்கு பதியவில்லை. பள்ளி மாணவிகள் பலாத்கார வழக்கில் கைதான சிவராமனுடன் மிக நெருக்கமாக இருந்தார். அவர் நடத்திய போலி என்.சி.சி., முகாமிலும் பங்கேற்றுள்ளார்.

இதையெல்லாம் நாங்கள் தலைமைக்கு புகாராக கூறினோம். இது குறித்து விசாரித்த சீமான், கரு.பிரபாகரனை அழைத்து கண்டித்தார்.

இந்நிலையில், தன் குட்டு வெளிப்படும் என பயந்து, பணத்தையும் சுருட்டிவிட்டு, சீமான் மீது குற்றம்சாட்டி கட்சியிலிருந்து விலகுவதாக கூறியுள்ளார்.

அவரை கட்சியிலிருந்து விலக்கி, எங்கள் கட்சியின் ஒரு லெட்டர் பேடை தலைமை வீணாக்க விரும்பவில்லை. கரு.பிரகாரன் நிர்வாகிகள், பொதுமக்களை ஏமாற்றிய பணத்தை எங்கு மறைத்துள்ளார் என தெரியவில்லை.

இது குறித்து மாவட்ட போலீசார் விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேட்டியளித்தார்.

இந்த பேட்டியின் போது, கிருஷ்ணகிரி, நா.த.க., நடுவண் மாவட்ட செயலாளர் தம்பிதுரை, கிருஷ்ணகிரி தொகுதி செயலாளர் நரேஷ்குமார், கிருஷ்ணகிரி மேற்கு தொகுதி தலைவர் அருள்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

  • devi sri prasad complains that turkish singer copied his pushpa movie song என்னோட பாடலை ஹாலிவுட்டில் காப்பியடிச்சிட்டாங்க- கடுப்பில் தேவி ஸ்ரீ பிரசாத்!