தெருநாய் கடித்ததால் அலட்சியமாக இருந்த நபர்.. ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு 16 நாட்களில் பரிதாப பலி!!
Author: Udayachandran RadhaKrishnan24 September 2025, 1:01 pm
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த வரதலம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி(45), இவர் கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுதா(40), இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 8ம் தேதி கருணாநிதி குடிபோதையில் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது தெரு நாய் ஒன்று அவரை கடித்துள்ளது.
அதற்கு சிகிச்சை எடுக்காமால் அவர் அலட்சியமாக காலம் கடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 21ம் தேதி கருணாநிதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளது.
மேலும், அவருக்கு நாய் கடித்த இடத்தில் வலி அதிகமாக இருந்ததால் குடும்பத்தினர் அவரை மீட்டு கடந்த 18ம் தேதி அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு கருணாதியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவருக்கு ரேபிஸ் நோய் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதால் அவரை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.
கருணாநிதியை பரிசோதனை செய்த டாக்டர்கள் நாய் கடித்ததால் அவர் ‘ரேபிஸ்’ நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்று உறுதிபடுத்தி உள்ளனர்.

மேலும், இதற்காக அவருக்கு தீவிர சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 18ம் தேதி அனுமதிக்கப்பட்ட கருணாநிதி சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து, தகவலறிந்த வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.
மேலும், இது தொடர்பாக கருணாநிதியின் மனைவி சுதா இன்று போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
