கழிப்பிடம் இல்லாததால் மின் இணைப்பு தர மறுப்பு! இருளில் தவிக்கும் வயதான தம்பதி!!

5 September 2020, 11:44 am
Old Couples - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே வீட்டிற்கு கழிப்பிடம் இல்லை என்ற காரணத்திற்காக மின்சார வாரியம் மின் இணைப்பு தர மறுப்பதால் முதியோர் தம்பதியினர் இருளில் வசித்து வருகின்றனர்/

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன், அவரது மனைவி கஸ்தூரி, இந்த தம்பதிக்கு 2 மகன்கள், இருவருக்கும் திருமணமாகி விட்டது. ஆரம்ப காலகட்டத்தில் சிறிய அளவில் சீனிவாசன் இளையரசனேந்தல் கிராமத்தில் தீப்பெட்டி கம்பெனி வைத்திருந்தார்.

கடந்த 2015ம் ஆண்டு போதிய வருவமானம் இல்லாத காரணத்தினால் தீப்பெட்டியை கம்பெனியை மூடிவிட்டார். முறைப்பாடி தனது தீப்பெட்டி கம்பெனியை மூடியதை அரசு அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 2018ல் தனது கம்பெனிக்கு வாங்கி இருந்த மின் இணைப்பினையும் முறைப்படி மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்து துண்டித்து விட்டார். இந்நிலையில் தனது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக சீனிவாசன், தனது மனைவி கஸ்தூரியுடன், முன்பு தீப்பெட்டி கம்பெனி வைத்திருந்த இடத்தின் அருகே இருந்த அறையை தன்னிடம் இருந்த சேமிப்பு பணத்தின் மூலமாக வீடாக மாற்றி வசித்து வருகிறார்.

அறையை வீடாக மாற்றியதற்கு முறைப்படி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் மனு அளித்து வீட்டு தீர்வை ரசீதும் பெற்றுள்ளார். தற்பொழுது இரு மகன்கள் கொடுக்கும் ரூ1000 மற்றும் 100 நாள் வேலை திட்டத்தில் பணிக்கு செல்லுவதால் கிடைக்கும் வருவாயை கொண்டு குடும்பத்தினை நடத்தி வருகின்றனர் இந்த தம்பதியினர்.

இந்நிலையில் சீனிவாசன் தனது வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் இருக்கும் மின்சார வாரிய அலுவலகத்திற்கு விண்ணப்பம் செய்துள்ளார். இதையெடுத்து விசாரணைக்கு வந்த மின்சார வாரிய அலுவலர்கள் வீட்டிற்கு கழிவறை இருக்க வேண்டும், அப்பொழுது தான் மின் இணைப்பு தரப்படும் என்று தெரிவித்துள்ளனர். இல்லையென்றால் வணிக இணைப்புக்கான மின் இணைப்பு பெற்றுக்கொள்ள வலியுறுத்தியுள்ளனர்.

மகன்கள் கைவிட்ட நிலையில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கிடைக்கும் வருவாயை கொண்டு வாழும் தங்களால் தற்பொழுது கழிப்பிட அமைக்க வாய்ப்பு இல்லை என்றும், சட்டத்தில் கழிப்பிடம் இருந்தால் மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என்ற விதி இல்லை என்று முதியவர் சீனிவாசன் முறையிட்டுள்ளார்.

ஆனால் கழிப்பிடம் இல்லமால் மின் இணைப்பு கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டதால் கணவனும்,மனைவி மின் இணைப்பு இல்லமால் இருளில் தவித்து வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மின்சார வாரிய உதவி பொறியாளர் பாபியிடம் கேட்ட போது வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்க சில விதிமுறைகள் இருப்பதாகவும், சமையல் அறை மற்றும் கழிப்பிடம் அவசியம் என்றும், சீனிவாசன் வீட்டை மீண்டும் அலுவலர்கள் மூலமாக ஆய்வு செய்து மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

மின்சார துறையில் உள்ள சில அதிகாரிகளிடம் கேட்ட போது வீடுகளுக்கான மின் இணைப்பு கொடுக்க கழிப்பிடம் கட்டயாம் என்பது சட்ட விதிகள் கிடையாது என்றும், கழிப்பிடம் குறித்து கேட்க வேண்டியது உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பு, வீடுகளுக்கான அமைப்பு, சமையல் அறை போன்றவை இருந்தால் போதும் வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கலாம் என்கின்றனர்.

மகன்கள் ஒதுக்கிய நிலையில், 100நாள் வேலையும் இல்லை என்ற சூழ்நிலையில் கழிப்பிடம் கட்ட முடியமால் இருக்கும் தம்பதிக்கு மின்வாரியம் கருணையுடன் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது. மின் சார வெளிச்சத்தினை பார்த்து விட மாட்டோமா என்ற எதிர்பார்ப்புடன் தம்பதியினர் காத்திருக்கின்றனர்.

Views: - 5

0

1