யார் யாருக்கோ வாலாட்டி பதவியை பெற்ற லியோனி முதலமைச்சர் பற்றி விமர்சிக்க தகுதியில்லை : ஆளுநர் தமிழிசை!

Author: Udayachandran RadhaKrishnan
30 July 2023, 11:11 am

புதுச்சேரி அரசு பள்ளி கல்வித்துறை மற்றும் உயர்கல்வி துறை சார்பில் தேசிய கல்வி கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்ட 3ம் ஆண்டு விழா காமராஜர் மணிமண்டபத்தில் கொண்டாடப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளராக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம், கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கல்விக் கொள்கையில் மாணவர்கள் ஒரு நாள் புத்தகப்பை இல்லாமல் பள்ளிக்கு வரும் திட்டம் மற்றும் வாட்டர் பெல் முறையை அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.

பின்னர் விழாவில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கை தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கிறது. அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். ஆனால் தமிழ் தமிழ் என்று பேசுவார்கள் அவர்கள் பிள்ளைகள் எல்லாம் மாற்று மொழியும் படித்துக் கொண்டிருக்கும்.

தமிழகத்தில் சமச்சீர் கல்வி என்று கூறுகிறார்கள். ஆனால் யாருக்கும் கல்வி சீராக கிடைப்பதில்லை. புதுச்சேரிக்கு வருகை புரிந்திருந்த தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லியோனி புதிய கல்விக் கொள்கையில் தமிழை பறித்து விட்டார்கள் என்று கூறுகிறார். சிபிஎஸ்இ பாடத்திட்டம் 22 மொழிகளில் உருவாக்கப் பட்டுள்ளது என்பது கூட தெரியாமல் அவர் ஒரு பாடநூல் கழகத்திற்கு தலைவராக இருக்கிறார் என்பது வேதனையாக உள்ளது.

அது மட்டுமல்லாமல் புதுச்சேரியில் பேசும்போது சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ரங்கசாமியை தலையாட்டி பொம்மை என்று அவர் விமர்சனம் செய்திருக்கிறார். இதற்கு என்னுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். யார் யாருக்கோ வால் ஆட்டிவிட்டு பதவி பெற்றவர் தான் லியோனி. தொலைநோக்கு பார்வையுடன் உருவாக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையால் புதுச்சேரி கல்வியில் முன்னேறி வருகிறது.

தமிழகத்தில் இருந்து வருபவர்கள் புதிய புதிய கல்விக் கொள்கையை விமர்சனம் செய்வதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் என்ன வேண்டுமென்று கேட்கிறார்களோ மக்கள் நலனுக்கு என்ன கோரிக்கை வைக்கிறார்களோ அதனை நிறைவேற்றி கோப்புகளுக்கு கையெழுத்திடப்படுகிறது.

புதுச்சேரியில் சுமூகமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு சிலர் ஆளுநருக்குத்தான் அதிகாரம், முதல்வருக்கு தான் அதிகாரம் என்றெல்லாம் கூறி ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.

தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற புதிய கல்விக் கொள்கை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றியதை ஆளுநர் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கண்டு ரசித்தனர். விழாவில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சார்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

  • lokesh kanagaraj introduce as a hero in upcoming film லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!