6 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட வடநெம்மேலி பாம்பு பண்ணை: சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு..!!

Author: Aarthi Sivakumar
29 September 2021, 11:37 am
Quick Share

மாமல்லபுரம்: கொரோனாவால் மூடப்பட்ட வடநெம்மேலி பாம்பு பண்ணை 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் தமிழக அரசின் ஊரக தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் வனத்துறை அனுமதியுடன் பாம்பு பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்த பாம்பு பண்ணையில் பழங்குடி இருளர்கள் 400 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு பாம்பு பிடிக்கும் தொழிலாளர்களாக உள்ளனர்.

அரசு அங்கீகாரம் வழங்கப்பட்ட இந்த 400 பழங்கு இருளர்கள் மட்டுமே விஷ பாம்புகள் பிடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் அருகில் உள்ள காடுகள், வயல்வெளிகள், புதர்கள் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று கொடிய விஷமுள்ள பாம்புகளை பிடித்து வந்து கொடுப்பர்.

அந்த பாம்புகளை மண் பானையில் அடைத்து வைத்து பாதுகாப்பர். பிறகு தினமும் வரும் பார்வையாளர்களுக்கு மண் பானையில் உள்ள பாம்புகளை எடுத்து காட்டுவார்கள். பாம்புகளிடம் விஷம் எடுக்கும் முறைகளும் சுற்றுலா பயணிகள் முன்னிலையில் இங்கு காண்பிக்கப்படுகிறது.

கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன், கட்டுவிரியன், சுருட்டை விரியன், கருநாகம், கோதுமை நாகம், மஞ்சள் நாகம் உள்ளிட்ட விஷ பாம்புகளை பிடித்து வருகின்றனர். பிடித்து வரும் பாம்புகளின் தன்மைக்கு ஏற்ப அவர்களுக்கு தொகை வழங்கப்படுகிறது. விஷம் எடுக்கப்பட்ட பாம்புகள் மீண்டும் 22 நாட்கள் கழித்து மீண்டும் காடு, வயல்வெளிகளில் கொண்டு விடப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் 6 மாதங்களாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அவர்கள் மீண்டும் பாம்பு பண்ணை திறக்கப்பட்ட மகிழ்ச்சியில் வழக்கம் போல் பாம்புகள் பிடிக்க காடுகளுக்கு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பாம்பு பண்ணையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இங்கு பெரியவர்களுக்கு 40 ரூபாயும், சிறுவர்களுக்கு 10 ரூபாயும் பார்வையாளர் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனாவால் கடந்த 6 மாதங்களாக மூடப்பட்ட இந்த பாம்பு பண்ணை நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் தற்போது பாம்பு பண்ணைக்கு திரண்டு வருகை தர ஆரம்பித்துள்ளனர். இந்த பாம்பு பண்ணைக்கு தற்போது வரும் பயணிகள், சிறுவர்கள் பலா் விஷ பாம்புகளை செல்பி, புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர்.

Views: - 283

0

0