அரசு பேருந்தை திருடிச் சென்ற வடமாநில இளைஞர்… தேடிச் சென்ற போலீசாருக்கு காத்திருந்த ஷாக்!
Author: Udayachandran RadhaKrishnan12 September 2025, 11:59 am
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருடப்பட்ட அரசு பேருந்து ஆந்திர மாநிலம் நெல்லூரில் மீட்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு பணிமனையில் இருந்து திருப்பதிக்கு செல்ல தயாராக இருந்த பேருந்தை மர்ம நபர் ஒருவர் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நிகழ்வு குறித்து தகவல் அறிந்த ஓட்டுநரும், நடத்துநரும் உடனடியாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையைத் தொடங்கினர்.
இதனிடையே, ஆந்திர மாநிலம் நெல்லூர் காவல்துறையினர், தமிழ்நாட்டு அரசு பேருந்து தங்கள் பகுதியில் இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் நெல்லூருக்கு விரைந்த சென்னை காவல்துறையினர், பேருந்தை மீட்டதுடன், குற்றவாளியான ஒடிசாவைச் சேர்ந்த ஞானராஜன் சாகு (24) என்பவரை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
பேருந்து நிலைய மேலாளர் ராம்சிங் அளித்த புகாரின் அடிப்படையில், கைது செய்யப்பட்ட ஞானராஜனிடம் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் சென்னை பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது.
