3வது முறையாக மோடி பிரதமராவது உறுதி… இரட்டை இலை சின்னத்தை முடக்க வாய்ப்பு ; ஓபிஎஸ்…!!

Author: Babu Lakshmanan
6 February 2024, 11:13 am
Quick Share

வரும் நாடாளுமன்ற தேர்தலில் உறுதியாக நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றும், சின்னம் முடக்குவதற்கு வாய்ப்புள்ளதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் உரிமை மீட்பு குழு ஆலோசனைக் கூட்டம் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், குப கிருஷ்ணன், வெள்ளைமண்டி நடராஜன், எம்எல்ஏக்கள் மனோஜ் பாண்டியன், ஜேசிபி பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் கூறியதாவது :- வரும் நாடாளுமன்ற தேர்தலில் உறுதியாக நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம். சின்னம் முடக்குவதற்கும் வாய்ப்பு உள்ளது. அப்போது எந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என்பதை நாங்கள் முடிவு செய்வோம்.

வரும் 24ஆம் தேதி சசிகலா கொடுக்கும் விருந்திற்கு இதுவரை எனக்கு அழைப்பு வரவில்லை. அழைப்பு வந்தால் கட்டாயம் கலந்து கொள்வேன். இஸ்லாமிய சிறைவாசிகளை தற்போது விடுவித்துள்ளது என்ற தகவல் வரவேற்கத்தக்கது. அதிமுக கரைவேட்டி கொடி பயன்படுத்த முடியவில்லை என்ற வருத்தம் அதிக அளவில் உள்ளது.

பாஜகவுடன் இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியவுடன் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். மீண்டும் மூன்றாவது முறையாக பாரத பிரதமர் மோடி பிரதமராக வருவது உறுதி. கடந்த 10 ஆண்டுகளில் சிறுபான்மை மக்களுக்கு பாஜக அரசில் எந்தவிதமான தொந்தரவும் இல்லை. உத்தர பிரதேசத்தில் கூட பாஜகவிற்கு சிறுபான்மையினர் மிகுந்த வரவேற்பு அளித்து வருகின்றனர்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் திமுக அரசு எப்படி நடவடிக்கை எடுக்கவில்லையோ, அதே போன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறித்து ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையின் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி கனவு உலகத்திலேயே சஞ்சரித்து வருகிறார்.அதிமுகவில் 2 கோடி தொண்டர்கள் தற்போது உள்ளனர் என்று எடப்பாடி கூறுவது சுத்த பொய்.

முன்னாள் முதல்வர் என்பதன் அடிப்படையிலேயே எனக்கு சட்டமன்றத்தில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்ற பதவியை சட்டமன்றத்தில் கிடையாது, எனக் கூறினார்.

Views: - 280

0

0