திரௌபதி அம்மன் கோவிலை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்.. சாதிய மோதலால் எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி?!

Author: Udayachandran RadhaKrishnan
7 June 2023, 11:38 am

விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் பழமையான திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. மேல்பாதி ஊரின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த திரெளபதி அம்மன் கோயில் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தாலும் கூட காலனி பகுதியில் வசித்து வரும் பட்டியலின மக்கள், இந்த கோயிலுக்குள் நுழைய கூடாது என்ற கட்டுப்பாடுகள் காலம், காலமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.


நவீனமயமான இந்த காலத்திலும் கூட திரெளபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் நுழைய கூடாது என்பதில் ஊர் பகுதியில் வசித்து வரும் ஒரு சமூகத்தை சேர்ந்த மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி நடைபெற்ற திருவிழாவின் போது திரெளபதி அம்மன் கோயிலுக்கு பட்டியலினத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் சென்று சாமி கும்பிட்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கோயிலுக்குள் நுழைந்த பட்டியலினத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பட்டியலின வகுப்பை சேர்ந்த பலர் படுகாயமடைந்தனர்.

இந்த சம்பவத்தையடுத்து மேல்பாதி கிராமத்தில் வாழ்ந்து வரும் பட்டியலின வகுப்பை சேர்ந்த மக்களிடையேயும், மற்றொரு சமுதாய மக்களிடையேயும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வந்து திரெளபதி அம்மன் கோயிலுக்குள் பட்டியலின மக்களை அழைத்து செல்வதற்காக மாவட்ட ஆட்சியர் மற்றும் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் தலைமையில் 8 முறை சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் நுழைய கூடாது என்பதில் மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் உறுதியாக இருந்ததால் அந்த சமரச பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது.

இதனால் மேல்பாதி கிராமத்தில் இரு சமுதாய மக்களிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியதால் சர்ச்சைக்குள்ளான திரெளபதி அம்மன் கோயிலை பூட்டி சீல் வைக்க விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.

இதனையடுத்து திரெளபதி அம்மன் கோயிலை இன்று காலை வருவாய் துறையினர் பூட்டி சீல் வைத்தனர். இதனால் மேம்பாதி கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் வடக்கு மண்டல காவல்துறை ஐஜி கண்ணன் தலைமையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 2000த்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேல்பாதி கிராம முழுவதையும் போலீசார் தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய திரெளபதி அம்மன் கோயிலை சுற்றிலும் பேரிக்கார்டுகளை அமைத்து போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கலவர தடுப்பு வாகனங்களுடன் அதிரடிப்படை போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

மேல்பாதி கிராம அமைந்துள்ள விக்கிரவாண்டியில் இருந்து கோலியனூர் கூட் ரோடு வரையிலான கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை போலீசார் மூடினர்.

விக்கிரவாண்டியில் இருந்து வரும் வாகனங்கள் முண்டியம்பாக்கம், விழுப்புரம் வழியாக திருப்பி விடப்பட்டது.

அதேப்போல் கோலியனூர் கூட்ரோடு வழியாக வரும் வாகனங்கள் விழுப்புரம், முண்டியம்பாக்கம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!