கோவை சித்தாப்புதூர் கோவிலில் ஓணம் திருவிழா : கோவில் வாசலில் மலையாள மக்கள் அத்திப்பூ கோலமிட்டு கொண்டாட்டம்..!
Author: Udayachandran RadhaKrishnan21 August 2021, 10:51 am
கோவை : ஒணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள சித்தப்புதூர் ஐயப்பன் கோவிலில் மலையாள மொழி பேசும் மக்கள் கோவிலின் வெளியில் நின்றே வழிபாடு நடத்தினர்.
ஆண்டுதோறும் அஸ்தம் நாளில் தொடங்கும் ஓணம் பண்டிகையின் போது மலையாள மொழி பேசும் மக்கள் மகாபலி மன்னர் தங்களை சந்திக்க வருவார் என்பதை ஐதீகமாக கொண்டுள்ளனர்.
அவரை வரவேற்க வழிபாடு நடத்தி, அத்திப்பூ கோலமிட்டு, நடனமாடியும் கொண்டாடுவர். அந்த வகையில் இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
கோவை மாவட்டம் கேரள மாநிலத்திற்கு அருகில் இருப்பதால் இங்கு மலையாள மொழி பேசும் கேரள மக்கள் ஏராளமானோர் உள்ளனர்.
அவர்கள் கோவையிலேயே தங்களது ஓணம் கொண்டாட்டத்தை நடத்தி வருகின்றனர். அதன்படி, இன்று தங்கள் வீடிகளில் பூக்கோலமிட்டு வழிபாடு நடத்தியதோடு, சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில் வழிபாடுகளை மேற்கொண்டனர்.
கொரோனா அச்சுறுத்தல் உள்ள சூழலில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வரும் படியும், சமூக இடைஇடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டனர். மேலும், கோவில் பிரகாரத்திற்குள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
கோவில் வாசலிலேயே நின்று பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வழக்கமாக இந்த பண்டிகையின் போது ஐய்யப்பன் கோவிலில் கூட்டம் அலைமோதும் நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் இன்று பக்தர்கள் அதிக அளவில் கோவிலுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0
0