90’s கிட்சை திருமணம் செய்து ஏமாற்றிய ஒருநாள் மனைவி : முதலிரவு முடிந்ததும் மூட்டை முடிச்சை கட்டி எஸ்கேப்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 October 2021, 11:04 am
Marriage Fraud -Updatenews360
Quick Share

திருமண பெண் புரோக்கர்களால் 90’s கிட்ஸ் ஒருவர் நகைகளை இழந்ததோடு,புது மனைவியும் ஒரு இரவு மட்டும் இருந்து விட்டு விடிந்த உடன் காரில் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில்,இந்த சம்பவத்தை செய்த ஒரு நாள் மனைவி உட்பட 5 பெண்களை போலீசார் கைது செய்து 90’s கிட்ஸ் களின் நெஞ்சில் பனி மழையையே பொழிய வைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 34). இவர் திருமணத்திற்காக 7 வருடமாக பெண் தேடி வந்துள்ளார். ஆனால் அவருக்கு ஏற்ற பெண் கிடைக்க வில்லை. இதனால் வயது ஏறியதே தவிர,பெண் கிடைக்கவில்லை.

இதையடுத்து திருமணம் செய்ய புரோக்கர்களை நாட முடிவு செய்த அவர், கோபிசெட்டிபாளையம் அருகே சிறுவலூரில் உள்ள ஒரு புரோக்கரை சந்திரனை பார்க்க சென்றார். அவரும் திருப்பூர் செட்டிபாளையத்தில் தனக்கு தெரிந்த பெண் புரோக்கர் ஒருவர் உள்ளார். அவருக்கு நிறைய மணமகள் தெரியும்.எ னவே அவரை அணுகுங்கள் என்றார்.

இதையடுத்து அவருடைய நண்பர் மற்றும் சிறுவலூர் புரோக்கர் ஆகிய 3 பேரும் திருப்பூர் பெண் புரோக்கர் அம்பிகா என்பவரது வீட்டிற்கு வந்தனர்.அங்கு அம்பிகாவின் வீட்டில் ரீசா எனும் இளம் பெண்ணும் இருந்துள்ளார்.

ரீசா தான் மணமகள் என்று பெண் புரோக்கர் அறிமுகம் செய்து வைத்தார்.அந்த பெண்ணை பார்த்ததும் ராஜேந்திரனுக்கு பிடித்து விட்டது. இதையடுத்து பெண் புரோக்கர்,திருமணம் செய்யக் கூடிய பெண்ணுக்கு தாய் தந்தை யாரும் இல்லை, பெண்ணுக்கு தாலி மற்றும் தோடு,துணி ஆகியவற்றை மாப்பிள்ளை வீட்டார் வாங்கி கொடுக்க வேண்டும். எனக்கு புரோக்கர் கமிஷனாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

பெண் கிடைக்காமல் இருந்தவருக்கு இளம்பெண் கிடைப்பதை நினைத்த பெருமைப்பட்ட ராஜேந்திரன். இவை அனைத்திற்கும் சரி என தலையாட்டினார்.

பெண்ணுக்கு யாரும் இல்லாததால் 2 நாட்களில் திருமணம் நடக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 24-ந்தேதி மணமகனின் குலதெய்வ கோவிலில் புரட்டாசி மாதம் என்று கூட பார்க்காமல் திருமணம் தடல்புடலாக நடந்துள்ளது. மணமகன் தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.

திருமணத்தின் போது பெண் வீட்டிலிருந்து பெரியம்மா தேவி, அவரது அக்கா தங்கம் ஆகியோருடன் பெண் புரோக்கர்கள் அம்பிகா, வள்ளியம்மாள் ஆகிய இருவர் வந்துள்ளனர். ஆனால் மாப்பிள்ளை வீட்டிலிருந்து உறவினர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு உள்ளார்கள். திருமணத்தின் முதல்நாள் அந்த 90’s கிட்ஸ்சுக்கு திருமண வாழ்வு சந்தோஷமாக தொடங்கியுள்ளது.

ஆனால் திருமணத்திற்கு அடுத்த நாள் ராஜேந்திரன் வீட்டில் இல்லாத நேரத்தில் அரைபவுன் தாலி, தோடு மற்றும் பட்டுப்புடவை சகிதம் வெளியே சென்ற ரீசா, அங்கு வந்த காரில் ஏறி சென்றுள்ளார்.

அதன் பின்னர் அவர் திரும்பி வரவே இல்லை. இதையடுத்து மனைவியின் செல்போனுக்கு ராஜேந்திரன் தொடர்பு கொள்ள முயன்றார். அப்போது ரீசாவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதைடுத்து சிறுவலூர் புரோக்கரை தொடர்பு கொண்டு தகவல் கூறிவிட்டு, புரோக்கர் அம்பிகாவை தொடர்பு கொண்டபோது அவர் சரியான பதிலை கூறவில்லை. அப்போதுதான் அந்த கும்பல் தன்னை ஏமாற்றி விட்டு, அரைபவுன் தாலி, அரைப் பவுன் தோடுடன் மோசடி செய்து விட்டு தப்பி சென்றது தெரிய வந்தது.

இதனை அடுத்து சிறுவலூர் புரோக்கர் மூலம் ரீசாவின் ஊரான அரியலூர் சென்று விசாரித்தபோது, அவருக்கு ஏற்கனவே ஜெய்ஸ்ரீதர் என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகள் இருப்பதும், 5 பெண்களும் சேர்ந்து தன்னை ஏமாற்றியதும் தெரிய வந்தது.

இதனை அடுத்து, இச்சம்பவம் குறித்து ராஜேந்திரன் குன்னத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஒரு நாள் மணப்பெண் ரீசா, பெரியம்மா தேவி, அக்கா தங்கம் மற்றும் புரோக்கர்கள் வள்ளியம்மாள், அம்பிகா ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஒருத்தனை ஏமாத்துனும்னா அவன் ஆசையை தூண்டனும் என ஒரு படத்தில் டயலாக் ஒன்று வரும். அது போல் 90’s கிட்ஸ்சுகளை குறிவைத்து ஏமாற்றி வருவதே இவர்களின் பாணியாக இருந்து வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எப்படியோ இந்த கும்பல் பிடிபட்டதில் திருமணம் ஆகாத பல 90’s கிட்ஸ்சுகள் வாழ்க்கை ஏமாற்றத்தில் இருந்து தப்பியது.

Views: - 679

0

0