கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க விண்ணப்பங்கள் வரவேற்பு!!

27 August 2020, 10:54 am
Online Applications- Updatenews360
Quick Share

கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் ஏழை மாணவர்கள் சேர இன்று முதல் இணையதளம் மூலம் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் அனைவருக்கும் இலவசமாக மற்றும் கட்டாயமாக கல்வி பெறும் உரிமைக்கு அரசியலமைப்பு சட்டத்தில் இடமுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் 86வது பிரிவில் சேர்க்கப்பட்ட சட்டப்பிரிவு 21ஏ சட்டத் திருத்தத்தின் படி, கல்வி உரிமை மசோதா இந்த சட்டத்திற்கு வலுசேர்க்கிறது.

அதன்படி, அரசு பள்ளிகளில் இலவச கல்வி வழங்கப்பட்டு வரும் நிலையில், தனியார் பள்ளிகளில் குறைந்தது 25 சதவீத குழந்தைகளை கட்டணமின்றி படிக்க வைக்க சட்டம் உள்ளது. அதன்படி, (ஆர்.டி.இ) கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் படி கோவையில் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஏழை மக்கள் தங்கள் குழந்தைகளை தங்களது வீடுகளுக்கு 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இருக்கும் தனியார் பள்ளியில் சேர்க்க முடியும். இதற்கான கட்டணத்தை அரசு செலுத்தும். ஆனால், குழந்தைகளை சேர்க்க போட்டி அதிகமானால் குலுக்கல் முறையில் இலவச கல்விக்கு குழந்தைகள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க பின்வரும் இணையதள பக்கத்தில் நுழையலாம். http://rte.tnschools.gov.in/ அல்லது மணிக்கூண்டு அருகே உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தை அணுகலாம். அங்கு விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Views: - 67

0

0