இறந்தவர்களின் உடல்களை தகனம், அடக்கம் செய்வதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி: ககன்தீப் சிங் பேடி தகவல்

15 May 2021, 9:17 pm
Quick Share

சென்னை: சென்னை மாநகராட்சி மயானங்களில் இறந்தவர்களின் உடல்களை தகனம், அடக்கம் செய்வதற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வதற்கான வசதிகளை செய்து வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க 300 பயிற்சி டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த பயிற்சி டாக்டர்கள், அந்தந்த மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தொலைபேசி ஆலோசனை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடி, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் கொரோனா நோயாளிகளை தொடர்பு கொண்டு, அவர்களின் உடல்நலம் குறித்து விசாரிப்பார்கள். அந்தவகையில் நேற்று முதல் அவர்கள் தங்களுடைய பணிகளை செய்ய தொடங்கினார்கள்.

சென்னை மாநகராட்சி தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இந்த பயிற்சி டாக்டர்கள் மேற்கொண்ட பணிகளை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். அவருடன் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தயாநிதிமாறன் எம்.பி. ஆகியோரும் இருந்தனர். அப்போது ஒரு நோயாளியை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. செல்போனில் தொடர்பு கொண்டு அவருடைய உடல்நிலை குறித்தும், அவருடைய அடிப்படை தேவைகள் தன்னார்வலர்களை கொண்டு பூர்த்தி செய்யப்படுகிறதா? என்றும் கேட்டறிந்தார்.

அதன்பிறகு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நிருபர்களிடம் கூறியதாவது:-சென்னையில் 140 மின்மயானங்கள் இருக்கிறது. காலையில் இறந்தவர்களின் உடல்கள் குறைவான எண்ணிக்கையிலும், மாலை நேரங்களில் அதிகளவிலும் வருகிறது. இருந்தாலும், எங்கும் உடல்களை காத்திருக்க வைக்காமல் உடல்களை எரியூட்டம் செய்வதற்கு மின் மயான ஊழியர்களை அறிவுறுத்தி இருக்கிறோம். 24 மணி நேரமும் மின் மயானத்தை இயக்ககூடாது. ஏனென்றால் அந்த எந்திரத்தை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அப்படி சுத்தம் செய்யாமல் தொடர்ந்து இயக்கினால் பழுதாகி நின்றுவிடும்.

சென்னையை பொறுத்தவரையில் மின் மயானங்களில் பதற்றமான நிலை இன்னும் வரவில்லை. சில இடங்களில் எந்திரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக சற்று தாமதம் ஏற்பட்டு இருக்கும். அதுபோன்ற நேரங்களில் அருகில் இருக்கும் மற்றொரு மின் மயானத்துக்கு உடல்களை எடுத்துச்சென்று எரியூட்டம் செய்ய மாநகராட்சி ஏற்பாடு செய்து வருகிறது. பழுது இருந்தால் அதை இரவு நேரங்களில் சரிசெய்ய சொல்லி இருக்கிறேன்.மயானங்களில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை கொண்டு அங்கு நடக்கும் நிகழ்வுகளை இங்கிருந்தபடி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதோடு, மயானங்களில் உடல்களை தகனம்,

அடக்கம் செய்ய கொண்டு செல்லலாமா?, காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்குமா? என்பது குறித்து ஆன்லைன் மூலம் பார்ப்பதற்கான வசதிகள், உடல்களை தகனம், அடக்கம் செய்வதற்கான முன்பதிவு வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கில் விதிமுறைகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை ரூ.1 கோடியே 44 லட்சத்து 46 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 239 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் மாநகராட்சி ஊழியர்கள், போலீசார்களிடம் ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 62

0

0