‘பணம் தர முடியுமா முடியாதா‘ : ஆன்லைன் ரம்மியால் உயிரை மாய்த்துக் கொண்ட சிறுவன்!!

25 September 2020, 10:49 am
Kanyakumari Dead - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த 9ஆம் வகுப்பு மாணவன் பெற்றோர்களிடம் பணம் கேட்டு தராததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே கருமன்கூடல் பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார்(வயது 43). இவர் சவுதி அரேபியாவில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கீதா(வயது 37) கருமன்கூடல் பகுதியில் தனது கணவரின் சொந்த வீட்டில் தனது மகனுடன் வசித்து வருகிறார்.

இரணியல் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் சஜன்(வயது 14) கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகள் பூட்டிய நிலையில் 5- மாதங்களாக பள்ளிக்கு செல்லாத நிலையில் தனது தாயின் செல்போனில் அவ்வப்போது ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடி வருவார்.

அப்படிதான் பப்ஜி கேமுக்கு அடிமையாகியுள்ளார். பப்ஜியை தொடர்ந்து ஆன்லைன் ரம்மியில் ஆர்வம் கொண்ட சஜன், கடந்த சில வாரங்களாகவே பணத்தை இழக்கவே தாயாரிடமும் வெளிநாட்டில் இருக்கும் தந்தையிடமும் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்த நிலையில் மகன் குறித்து தனது கணவரிடம் கீதா கூறியுள்ளார்.

தந்தை மகனை கண்டித்த நிலையில் தனது தாயாரிடம் தகராறு செய்த சஜன் தனது செல்போனை வீட்டு முன் எறிந்து உடைத்து விட்டு வெளியேறினார். ஆனால் கடந்த செவ்வாய் அன்று தாய் தேடவே மாயமான அவர் நேற்று வீட்டிற்கு வந்து பணமும் புதிய செல்போணும் வாங்கி தர வேண்டும் என்று மிரட்டிய நிலையில் தாயார் மறுக்கவே வீட்டிலிருந்து வெளியே சென்ற சஜன் நேற்றிரவு அருகில் இருந்த வாழை தோட்டத்தில் மயங்கிய நிலையில் காணப்பட்டார் .

அதை கண்ட விவசாயிகள் மாணவனை மருத்துவமனையில் அனுமதித்ததோடு பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர் திங்கள்சந்தை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அந்த சிறுவன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

இதுகுறித்து மண்டைக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .சிறு குழந்தை கவனிப்பாரின்றி தாயாரின் செல் போனில் பப்ஜி கேம் விளையாடி ஆன் லைன் ரம்மியில் பணத்தையும் இழந்து வாழை தோட்டத்தில் விஷம் அருந்தி உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 12

0

0