அறநிலையத்துறை கீழ் உள்ள கல்லூரிகளில் மதக்கல்வி மட்டுமே நடத்த வேண்டும் : ஹெச்.ராஜா!!

Author: Udayachandran RadhaKrishnan
18 October 2021, 11:37 am
H raja -Updatenews360
Quick Share

திருப்பூர் : அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள கோவில்களை பராமரிக்க திறமை அற்றதாக அறநிலையத்துறை உள்ளதால் அறநிலையத்துறை உடனடியாக ஆலயங்களை விட்டு வெளியேற வேண்டும் என ஹெச் ராஜா தெரிவித்துள்ளார்.

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் நெருப்பெரிச்சல் மண்டல பாஜக சார்பில் நடைபெற்றது . இதில் சிறப்பு விருந்தினராக பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச் ராஜா கலந்து கொண்டு உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தியாவில் விரைவில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட இருப்பதாகவும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளால் முடியாததை பிரதமர் மோடி செய்திருக்கிறார் எனவும் , தமிழகத்தில் தடுப்பூசி முகாம்களில் மத்திய அரசால் இலவசமாக வழங்கப்பட்ட தடுப்பூசி என விளம்பரப் பதாகை வைக்க வேண்டும் எனவும் அதேபோல் ரேஷன் கடைகளிலும் மத்திய அரசின் தொகுப்பின் கீழ் வழங்கப்படும் அரிசி குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார் .

அறநிலையத்துறை சார்பில் கோவில்களில் இருந்து தங்கத்தை எடுக்கும் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை எனவும் , தங்கத்தை உருக்கும் திட்டம் குறித்த அரசாணை அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார் .

அறநிலையத் துறைக்கு கீழ் உள்ள கோவில்களை பராமரிக்க திறமையற்ற துறையாக இருப்பதாகவும் அறநிலைத்துறையின் கீழ் உள்ள 20 சதவீத கோயில்கள் பராமரிப்பில்லாமல் பயன்பாடற்று கிடைப்பதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில் புதிய கோவில்களை கையகப்படுத்துவதை அறநிலையத்துறை கைவிட வேண்டும் எனவும் உடனடியாக ஆலயங்களை விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும் அதற்கான பணிகளை செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஆனால் அதுவரை சட்டப்படி கோவில்களை பராமரிக்க வேண்டும் எனவும் அறநிலையத் துறையில் உள்ள குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வேறு துறைகளுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

அதேபோல் அறநிலையத்துறையின் கீழ் கட்டப்படும் கல்லூரிகளில் மதக் கல்வி மட்டுமே நடத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் பாஜகவின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Views: - 679

0

0