பிரதமரை பாராட்ட முதலமைச்சருக்கு மட்டும் மனம் வரவில்லை.. தமிழிசை விமர்சனம்!
Author: Udayachandran RadhaKrishnan7 May 2025, 3:35 pm
கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியவர், பாகிஸ்தான் மீதான இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு பாராட்டுகளையும், இதை முன்னெடுத்த பிரதமருக்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, ‘முதலில் நம் ராணுவ வீரர்களுக்கு எனது மிகப் பெரிய பாராட்டையும் இந்த துணிச்சலான முடிவை எடுத்த பாரதப் பிரதமருக்கு இந்த உலகமே பக்கபலமாக இருப்பதையும் இங்கே பதிவு செய்கிறோம். தீவிரவாதத்திற்கு எதிராக பாரத தேசம் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்கும் என்பதை நேற்று நள்ளிரவில் இருந்து அதை செய்து காட்டி இருக்கிறோம்.
காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டு நாம் துடிதடித்திருந்த நிலையில் எந்த நேரத்திலும் தீவிரவாதத்திற்கு பாரத தேசத்திலும் இந்த உலகத்திலும் இடமில்லை என்பதை பாரத பிரதமர் அவர்கள் பதிவு செய்திருக்கிறார். ஆனால் நமக்கு வேதனையாக இருப்பது என்னவென்றால், அப்படி ஒரு பாதுகாப்பு நடவடிக்கையை கூட விமர்சனம் செய்பவர்கள் தமிழகத்திலும் இருக்கிறார்கள் என்பது தான். நாங்கள் நேற்றைக்கு முன்தினம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சட்டவிரோதமாக தமிழகத்தில் பாகிஸ்தானியர்கள் யாராவது இருந்தால் அவர்களை அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று தான் கூறினோம். அதை மதக்கலவரம் உருவாக்க ஏற்பாடு செய்வதை போல முதலமைச்சரும் அமைச்சர்களும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
இதே கோவையில் சட்டவிரோதமாக பணியாற்றிய பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது நமக்கு தெரியும். எனவே இந்த காலகட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டில் உள்ள பல முதல்வர்கள் பாரத பிரதமரின் உறுதியான நடவடிக்கைக்கும் இராணுவத்தின் தயார் நிலைக்கும் ராணுவம் தீவிரவாத அமைப்புகளை அழித்து ஒழித்ததற்கும் பாராட்டுகளை தெரிவித்து வரும்போது, தமிழகத்தில் மட்டும் முதலமைச்சர் தெரிவிக்கவில்லை.
எதற்கெடுத்தாலும் பெருமை பேசிக்கொள்ளும் முதல்வர் நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள போது அதற்கு ராணுவத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அதற்கு உறுதியான நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு ஒரு பாராட்டை பதிவு செய்வதற்கு கூட தமிழக முதலமைச்சருக்கு மனமில்லை என்பது தான் மன வேதனையாக உள்ளது. எந்த அளவிற்கு இவர்கள் விரோதத்தோடு மனதளவில் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
பாரத தேசம் என்பது ஒன்றுதான். தமிழக முதலமைச்சரின் மக்கள் விரோத, பிரதமர் விரோத, மத்திய அரசு விரோத போக்கை இந்த ஒரு இக்கட்டான சூழலில் பதிவு செய்வதையும் வெளிப்படையாக செய்கிறார் என்பதுதான் மன வேதனை.
நான்கு ஆண்டுகள் முடித்து விட்டோம், இந்த அரசு தொடரும் பல்லாண்டு என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நான்கு ஆண்டு முடிந்த நிலையில், 14,000 செவிலியர்கள் நிரந்தரம் செய்யப்படாமல் போராடி வருகின்றனர், இடைநிலை ஆசிரியர்கள் நிரந்தரம் செய்யாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள், அங்கன்வாடி ஊழியர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள், கரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்கள் போராடி வருகின்றனர், எல்லாத்தையும் விட தலைகள் துண்டிக்கப்பட்டு கொலைகள் நடைபெற்று வருகிறது.
தலை நிமிர்ந்து நடந்த தமிழகம் இன்று தலைகள் துண்டிக்கப்பட்டு கூலி ஆட்களால் அராஜகம் நடைபெற்றுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்.
வேங்கை வயல் விவகாரத்தில் இரண்டு ஆண்டுகள் முடிந்தும் இன்று வரை அதற்கு பதில் இல்லை. இதில் சமூக நீதி எங்கே இருக்கிறது. நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதிய வேற்றுமையால் கலவரம் வெடித்துள்ளது.
குழந்தைகள் மத்தியில் சாதிய வேற்றுமை இருக்கிறது. கடந்த ஒரு வாரமாக நான்கு ஆண்டு முடிவு செய்து விட்டோம் என கொண்டாடி வருகிறார்கள். ஆனால் மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த கொண்டாட்டம் இன்னுமொரு பத்து மாதம் நீடிக்கும். இதுதான் கடைசி கொண்டாட்டமாக இருக்கும். ஆனால், மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என முதல்வர் சொல்கிறார்.புதிதாக வருபவர்கள் எல்லாம் முதல்வர் கனவில் இருப்பதாக முதல்வர் பேசியதை படித்தேன்.
ஏன் உங்கள் மகன் மட்டும்தான் முதல்வர் கனவில் இருக்க வேண்டுமா? யாருக்கு வேண்டுமானாலும் தமிழகத்தில் முதல்வர் கணவர் காண்பதற்கு உரிமை உள்ளது. புதிதாக யாரும் முதல்வர் கனவு காண வேண்டாம் எனவும், சந்தர்ப்பவாத மறைமுக கூட்டணி எனவும் யாரை குறிப்பிடுகிறீர்கள்? எங்கள் கூட்டணி திமுக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்பதுதான். எனக்கு குளிர்ஜுரம் வந்து விடும் என சேகர்பாபு கூறுகிறார். அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளும் அளவிற்கு எனக்கு தெரியும்.
இன்று கலப்பட தண்ணீர், டாஸ்மாக் தண்ணீர் என அனைத்து பகுதிகளிலும் உள்ளது. கலப்பட குடிநீரால் ஒரே குடும்பத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழல் தான் தமிழகத்தில் இருந்து கொண்டிருக்கிறது. பிரதமரோடு துணை நிற்போம் எனும் ஒரு வார்த்தை சொல்வதற்கு கூட உங்களுக்கு மனமில்லை என்றுதான் நான் கூறுகிறேன். நீங்கள் பாராட்டி தான் பிரதமருக்கு பாராட்டு வரவேண்டும் என்பதில்லை.
ஆனால் ஒரு பரந்த மனப்பான்மை இல்லை என்பதுதான் எனது கருத்து.பிரதமர் அவர்கள் பெண்களுக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று பார்க்க வேண்டும். எனக்கு பெருமையாக இருந்தது, இன்று ராணுவ நடவடிக்கையை மக்களுக்கு எடுத்துச் சொல்வது பெண் அதிகாரிகளாக இருந்தது பெருமைக்குரியதாக இருந்தது.உலக தேசத்தில் இல்லாத அளவிற்கு ராணுவ பைலட்டுகளாக இந்தியாவில் பெண்கள் பணியாற்றி வருகின்றனர்.
பெண்கள் கூட பயமின்றி ராணுவத்தில் பணியாற்ற முடியும் எனும் வகையில் பிரதமர் வழிநடத்தி வருகிறார். அதே நேரத்தில் தீவிரவாதத்தை எந்த ரூபத்தில் வந்தாலும் அதை எதிர்கொள்வோம் என்று இருப்பது நமது நாட்டிற்கு பெருமை.
தீவிரவாதத்திற்கு நாம் பதிலடி கொடுத்து விட்டோம். நாம் தாக்க பதிலடி தான் கொடுத்துக் கொண்டிருக்கிறோம், அவர்கள் தக்க பதிலடி கொடுக்க முடியாது என்பதுதான் எனது கருத்து.சிகிச்சைக்கு வந்தவர்களை வெளியேற்றுவதால் மனிதாபிமானம் இல்லையா என கேட்கின்றனர்.
சிகிச்சைக்கு கூட ஏற்பாடு செய்ய முடியாத ஒரு நாடு தீவிரவாதிகளுக்கு ஏற்பாடு செய்கிறது என்பதுதான் கொடுமை. நம் நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் அதற்காக எந்த பச்சாதானம் யார் மீதும் காட்ட முடியாது. இலங்கை தமிழர் படுகொலையின் போது வைகோ ஒரு மாதிரி பேசிவிட்டு இன்று போர் வேண்டாம் என்பது போல் பேசுகிறார்.
போர் குறித்து முடிவு செய்வது நாட்டின் ராணுவம்தான் நீங்கள் அதில் கருத்து சொல்வது எப்படி சரியாக இருக்க முடியும்.இந்திய பெண்கள் துப்பாக்கி ஏந்தி போராடி வருவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நான் நேரடியாக துப்பாக்கி எந்த வேண்டியதில்லை. தினமும் ஒவ்வொரு அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு வெளிவந்து கொண்டுள்ளது.
முதலில் அதை அவர்கள் சரி செய்ய வேண்டும். மக்களின் வரிப்பணத்தை சுருட்டியவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள், 2026 அதற்கு பதில் சொல்லும்.ராகுல் காந்தி, அண்ணன் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பாரத தேசத்தோடு இந்த நேரத்தில் இருக்க வேண்டும். நாட்டுப்பற்றோடு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்’ என தெரிவித்தார்.
