அதிமுக உறுப்பினர் சேர்க்கை…! கட்சி தலைமை அதிரடி உத்தரவு

1 August 2020, 9:44 pm
Quick Share

சென்னை: அதிமுக உறுப்பினர் சேர்க்கை படிவங்களை ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்று அக்கட்சி தலைமை  உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

அதிமுக சட்ட திட்ட விதிமுறைகளின்படி, கழகத்தில் ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ளவர்களின் பதிவை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்த்தலுக்கான நிறைவுப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது.

கழகத்தில் ஏற்கனவே உறுப்பினர்களாக இருந்து பதிவை புதுப்பிக்காதவர்கள் மற்றும் விடுபட்ட உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பதற்காக, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்ட செயலாளர்கள், தலைமையில் அடுத்து பெற்றுச் சென்ற உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து உரிய கட்டணத் தொகையுடன் ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் தலைமை அலுவலகத்தில் சேர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எக்காரணத்தை கொண்டும் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படமாட்டாது. ஆகவே மாவட்ட செயலாளர்கள் மற்றும் கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த உறுப்பினர் சேர்ப்பு பணியில் முழுமையாக ஈடுபட்டு உரிய காலத்திற்குள் இப்பணியினை செய்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

உறுப்பினர் உரிமை சீட்டுகளைப் பெற்றுள்ள கழக உடன்பிறப்புகள் மட்டுமே நடைபெற உள்ள கழக அமைப்புத் தேர்தலில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கும் தகுதி உடையவர் ஆவார்கள் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply