டெல்லி செல்லும் ஓபிஎஸ்? பிரதமரை சந்திக்க ஏற்பாடு.. சமாதானம் செய்யும் பாஜக!
Author: Udayachandran RadhaKrishnan4 August 2025, 6:57 pm
பிரதமர் தமிழகம் வந்தபோது தன்னை சந்திக்க அப்பாயின்மென்ட் தரவில்லை எனக் கூறி, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து திடீரென விலகியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விலகலுக்குப் பிறகு, ஓ.பி.எஸ். இரண்டு முறை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசியது மேலும் சலசலப்பை உருவாக்கியது. “ஓ.பி.எஸ்.ஐ எடப்பாடி பழனிசாமியும் , பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனும் சாதாரணமாக எடைபோட்டுவிட்டனர். தென் மாவட்டங்களில் அவருக்கு உள்ள செல்வாக்கு இன்னும் அவர்களுக்கு புரியவில்லை,” என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
முதல்வர் ஸ்டாலின் ஓ.பி.எஸ்.இடம் காட்டிய மரியாதையில் 10 சதவீதம் கூட நயினார் நாகேந்திரன் காட்டவில்லை என்றும், இதனால் ஓ.பி.எஸ். மனம் நொந்து விலகியதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மேலும், இ.பி.எஸ். தனிப்பட்ட ஈகோ காரணமாக ஓ.பி.எஸ்.ஐ கூட்டணியில் சேர்க்காமல், அ.தி.மு.க.வின் தோல்விக்கு வழிவகுப்பதாகவும், 2021-ல் செய்த தவறை மீண்டும் செய்வதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், ஓ.பி.எஸ்.இன் அரசியல் பலத்தை உணர்ந்த பா.ஜ.க. தலைமை, அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் பிரதமரை சந்திக்க ஓ.பி.எஸ்.இக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
ஓ.பி.எஸ். மீண்டும் பா.ஜ.க. கூட்டணிக்கு திரும்பினால், குறைந்தபட்சம் ஒரு சதவீத வாக்குகள் கூடுதலாகக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில், இ.பி.எஸ். தனது முடிவை மாற்றிக் கொள்வாரா என்பது அ.தி.மு.க.வின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
