துப்புரவு தொழிலாளியின் மகனுக்கு மருத்துவ படிப்புக்கான செலவை ஏற்ற நல்லறம் அறக்கட்டளை

21 September 2020, 9:58 pm
Quick Share

கோவை: துப்புரவு தொழிலாளி மகனின் மருத்துவ படிப்புக்கான செலவை நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் ஏற்று முதல் கட்ட மருத்துவ படிப்புக்கு மாணவர் சுபாஷின் பெற்றோருக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஆதிலட்சுமி வீட்டு வேலைகளை செய்து வருகிறார். கொரோனா காரணமாக போதுமான வேலை வாய்ப்பு இல்லாததால், வெங்கடேஷ் சமீபத்தில் கழிவு நீர் கால்வாய்களில் அடைப்புகளை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இவரது மகன் சுபாஷ் ரஷ்யாவில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்விக் கட்டணத்தை செலுத்திய பின்னர், மூன்றாம் ஆண்டு கட்டணத்தை செலுத்த முடியவில்லை.
இதன் காரணமாக, ரஷ்யாவில் மருத்துவம் படித்துக்கொண்டிருந்த சுபாஷ் தனது படிப்பை பாதியாக கைவிட வேண்டியிருந்தது. துப்புரவுத் தொழிலாளி வெங்கடேஷ் தனது மகனின் மருத்துவப் படிப்பின் சிரமத்தை தனியார் தொலைக்காட்சியில் பதிவு செய்துள்ளார்.

இந்த செய்தியைப் பார்த்த பிறகு, கோவை நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன், இந்த ஆண்டுக்கான மாணவர்களின் கல்வி கட்டணத்தை ஏற்க முடிவு செய்து, மாணவரின் பெற்றோரை கோவைக்கு அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து நல்லறம் அறக்கட்டளையின் அம்மா ஐ.ஏ.எஸ் அகாடமியில் மாணவரின் பெற்றோர் அறக்கட்டளை தலைவர் அன்பரசனை சந்தித்தனர். அப்போது அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் முதல் கட்ட மருத்துவ படிப்புக்கு மாணவர் சுபாஷின் பெற்றோருக்கு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

இதையடுத்து நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன் கூறுகையில், ஏழ்மையில் இருக்கும் மாணவர்களுக்கு நல்லறம் அறக்கட்டளை தொடர்ந்து உதவிகள செய்து வருவதாகவும், ஐஏஎஸ் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இலவச பயிற்சியும் அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்து மருத்துவ மாணவர் சுபாஷின் பெற்றோர் பேசுகையில், “நல்லறம் அறக்கட்டளையில் இருந்து உதவி செய்து இருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், முதல் கட்டமாக ஒரு லட்ச ரூபாய் வழங்கி இருப்பதாகவும், இந்த ஆண்டு கல்விகட்டணத்திற்கு தேவைப்படும் மீதி தொகையும் அறக்கட்டளை சார்பில் வழங்க இருப்பதாக தெரிவித்து இருப்பதாகவும் நெருக்கடியில் இருந்த தங்களுக்கு உதவியதை வாழ்நாள் வரை மறக்க மாட்டோம்” தெரிவித்தனர்.

Views: - 11

0

0