செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 11 பேர் பலி: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு…ஆட்சியர் விளக்கம்..!!

5 May 2021, 9:56 am
chengalpat hosiptal - updatenews360
Quick Share

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஒரே இரவில் 11 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு, ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளொன்றுக்கு 1500க்கும் மேற்பட்டோர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஒரே நாளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 1608 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கொரோனா நோய் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 3 மணி நேரம் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அடுத்தடுத்து 11 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஆக்சிஜன் தீர்ந்துவிட்டதால், மருத்துவமனை நிர்வாகம் சார்பாக அருகில் இருக்கும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வேண்டும் என கோரிக்கை வைத்தும் அங்கும் குறைந்த அளவிலேயே இருந்ததால் அதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. எனவே அதற்கு மாற்று ஏற்பாடாக அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்களின் உதவியுடன் ஆபத்தான நிலையில் இருந்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது.

மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக இறந்த நோயாளிகளின் உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த மூன்று மணி நேரத்திற்குப் பிறகே பொத்தேரியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் இருந்து காவல்துறையினரின் முழு ஒத்துழைப்புடன் ஆக்சிஜன் கொண்டுவந்து நிரப்பப்பட்டது. இதன் பிறகே செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நிலைமை ஓரளவு சீரானது.

இதுகுறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து அவரிடம் கேட்ட போது, தேவையான ஆக்ஸிஜன் கையிருப்பு இருந்ததாகவும், இதை எதிர்பாராத இறப்பாக கருதுவதாகவும், இது குறித்து உரிய விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். அடுத்தடுத்து ஆக்ஜிசன் பற்றாக்குறையால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி சிகிச்சைக்கு வந்த 11 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

உயிரிழந்த அனைவருமே ஆக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாகவே உயிரிழந்ததாக அவர்களது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Views: - 106

0

0