அரசு மருத்துவமனையின் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு… காயமின்றி தப்பிய பெண்கள், குழந்தைகள் வேறு வார்டுக்கு மாற்றம்

Author: Babu Lakshmanan
3 March 2023, 9:58 pm

திருப்பூர் ; பல்லடம் அரசு மருத்துவமனையில் பெண்கள் வார்டில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். திருச்சி – கோவை தேசிய நெடுஞ்சாலையில் அதிகப்படியான விபத்துக்கள் ஏற்படுவதால் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் இந்த மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பல்லடம் அரசு மருத்துவமனையில் 24 பேர் சிகிச்சை பெரும் அளவிற்கு படுக்கை வசதிகளுடன் கூடிய பெண்கள் வார்டில் உள்ள ஒரு பகுதியில் பெண்கள் குழந்தைகள் உட்பட 12 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இன்று பிற்பகல் 2 மணி அளவில் திடீரென பெண்கள் வார்டு கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

அருள் புரத்தைச் சேர்ந்த தர்ஷனா என்ற குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இடிந்து விழுந்த மேற்கூரை குழந்தை படுத்திருந்த கட்டிலுக்கு அருகிலேயே விழுந்துள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக இந்த குழந்தை உயிர் தப்பியுள்ளது. மேலும் செவிலியர்கள் அனைத்து நோயாளிகளையும் வெளியேற்றினர். தற்போது நோயாளிகள் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சில நோயாளிகள் மருத்துவமனையில் உள் நோயாளி உதவியாளர்கள் தங்கும் கட்டிடத்தின் வெளியே அமர வைக்கப்பட்டுள்ளனர். பெண்கள் வார்டு பகுதியில் இருந்த கட்டில்கள் மருத்துவ உபகரணங்கள் அனைத்தையும் தற்போது வெளியேற்றி வெளியே வைத்துள்ளனர்.

அரசு மருத்துவமனையில் உள்ள பெண்கள் வார்டு கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் நோயாளிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • interim ban for the verdict that says ar rahman should give 2 crores in copyright issue ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தடை? திடீரென தீர்ப்பளித்த நீதிமன்றம்! இவருக்கு இப்படி ஒரு நிலைமையா?