‘இன்னும் கூடுதல் பஸ்ஸு விட்டிருக்கலாம்’… அலைமோதும் கூட்டம் ; அதிருப்தியில் கால் கடுக்க காத்திருக்கும் பயணிகள்!

Author: Babu Lakshmanan
13 January 2023, 9:44 pm
Quick Share

பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்ல கரூர் பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள், நீண்ட நேரம் காத்திருந்தும் பேருந்து வராததால் விரக்தியடைந்துள்ளனர்.

பொங்கல் பண்டிகை நாளை போகியுடன் தொடங்க உள்ளதால், தமிழர்களின் திருவிழாவான பொங்கல் பண்டிகை நாளை முதல் கோலாகலமாக கொண்டாட உள்ளது. இதனால், இன்று முதலே மக்கள் சொந்த ஊருக்கு செல்ல துவங்கி உள்ளனர். தொழில் நகரமான கரூர் மாவட்டத்திற்கு மற்றும் மாவட்டங்களில் இருந்து வேலைக்காக வந்திருந்த மக்கள் பொங்கல் பண்டிகைக்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல கரூர் பேருந்து நிலையம் வந்த வண்ணம் உள்ளனர்.

கரூர் மண்டலத்துக்குட்பட்ட கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, முசிறி பணிமனைகளில் இருந்து 140க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், டெக்ஸ்டைல், கொசுவலை, பேருந்து கூண்டு கட்டும் நிறுவனங்களில் பணியாற்றும் பல்வேறு தொழிலாளர்களுக்கு நாளை முதல் விடுமுறை என்பதால் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக அதிகளவில் பேருந்து நிலையத்தில் கால் கடுக்க காத்திருக்கும் நிலை நிலவி வருகிறது.

மேலும், வெளி மாவட்டங்களான திருச்சி, திண்டுக்கல், சேலம், மதுரை உள்ளிட்ட ஊர்களிலிருந்து வரும் பேருந்துகளும் இருக்கைகள் காலி இல்லாமல் வருவதால் கரூரிலிருந்து பயணிகள் ஏறிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எந்தவித முறையான பேருந்து வசதிகளையும் அரசு சார்பில் ஏற்படுத்தி தராததால் பயணிகள் நீண்ட காத்திருப்பிற்கு பிறகு பேருந்தில் ஏறிச் செல்வதாக குற்றம்சாட்டுகின்றனர்.

இதுபோன்ற விழா காலங்களில் முறையான பேருந்து வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும், தற்போது போதிய பேருந்து வசதி இல்லாததால் மக்கள் பேருந்துகளில் நின்ற வண்ணம் செல்வது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். பாதுகாப்பு பணிக்காக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 425

0

0