ஆற்றில் கொட்டப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ மனுக்கள்… திமுக ஆட்சியின் அவலம்…அண்ணாமலை வேதனை!
Author: Udayachandran RadhaKrishnan29 August 2025, 1:10 pm
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அடுத்துள்ள கீழடி , பூவந்தி, மடப்புரம், ஏனாதி, நெல் முடிக்கரை பகுதிகளில் கடந்த 21 22 ஆகிய தேதிகளில் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்ட முகாம் நடைபெற்றது.
தமிழக முதல்வர் ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்ட திட்டத்தின் தரப்படும் மனுக்கள் 45 தினங்களுக்குள் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் திருப்புவனம் வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பெறப்பட்ட 50 க்கும் மேற்பட்ட மனுக்கள் மிதப்பதாக தகவல் வெளியானது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் அப்பகுதி சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி, தலையாரி ஆகியோர் ஆற்றில் மிதந்து சென்ற மனுக்களை சேகரித்து எடுத்துச் சென்றனர்.
தமிழக முழுவதும் 45 தினங்களுக்குள் தீர்வு காணப்படும் என மனுக்கள் கொடுத்த மக்களுக்கு இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் இது தொடர்பான வீடியோவை வெளியிட்டு கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

அதில், கவர்ச்சிகரமான பெயரில் திட்டத்தை அறிவித்தால் மட்டும் போதுமா? மக்கள் வரிப்பணம் மூலம் வீண் விளம்பரங்களில் மட்டும் தான் திமுக அரசு கவனம் செலுத்துகிறது,மக்களின் கோரிக்கை மனுக்கள் கூட குப்பைகளை போல வீசப்படும் அவலம் திமுக ஆட்சயில் நடக்கிறது.
சிவகங்கை மாவட்டத்தில் பெறப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள் வைகை ஆற்றுக்குள் சென்றது எப்படி? உங்களுடன் ஸ்டாலின் மனுக்களின் நிலைமை என்ன என்பது சிவகங்கை வைகை ஆற்றை பார்த்தால் தெரிகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
