நீட் தேர்வுக்கு எதிர்ப்பு : தமிழகத்தில் வலுக்கும் மக்கள் போராட்டம்..!

13 September 2020, 12:18 pm
Quick Share

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. இந்த சூழலில், தேர்வு அச்சம் காரணமாக நேற்று மாணவி ஒருவர் உட்பட 2 மாணவர்கள் என மூன்று பேர் பரிதாபமாக தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டனர். தமிழகத்தையே நிலைகுலைய வைத்துள்ள இந்த சம்பவம் மக்கள் மத்தியில் உணச்சி பூர்வமான கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கடந்த 2016ஆம் ஆண்டு சில மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2017 முதல் இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடந்து வருகிறது.

அதே நேரம், நீட் தேர்வு பயத்தால் தமிழகத்தில் மாணவ, மாணவிகளின் தற்கொலை தொடர்கிறது. அரியலூர் அனிதா தான் நீட் தேர்வு காவு வாங்கிய முதல் மாணவி. அவரை தொடர்ந்து, விழுப்புரம் பிரதீபா, சேலையூர் ஏஞ்சலின், திருவள்ளூர் ஸ்ருதி, திருப்பூர் ரிதுஸ்ரீ, தஞ்சாவூர் வைஷியா, நெல்லை தனலட்சுமி, கோவை சுபஸ்ரீ என நீட் மரணங்கள் தொடர்கின்றன.

இந்த நேற்று மீண்டும் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதனால் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள், பெற்றோர் அமைப்பு, கட்சி தொண்டர்கள் என பலரும் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில், கரூர் சுங்ககேட் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோஷங்களை முழக்கி போராட்டம் நடத்திய அவர்களை போலீசார் கைது செய்தனர். அதனை தொடர்ந்து, கும்பகோணம் பழைய டைமண்ட் திரையரங்கம் முன்பு விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதேபோல் நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோர் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து வந்த மக்கள் கூட்டமைப்பு சங்கத்தினர் மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி முன்பு நீட் தேர்வை ரத்து செய்க என கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

Views: - 0

0

0