ஜெ. நினைவிடத்தை பார்வையிட அனுமதி: மெரினாவில் திரண்ட பொதுமக்கள்..!!

9 April 2021, 4:52 pm
Quick Share

சென்னை: மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடத்தை பார்வையிட இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளதையடுத்து பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே ஃபீனிக்ஸ் பறவை வடிவில் பிரம்மாண்ட நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.57.8 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த நினைவிடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜனவரி 27ம் தேதி திறந்து வைத்தார்.

இதனையடுத்து அங்கு அருங்காட்சியகம் மற்றும் அறிவுத்திறன் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்ததால், பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதால், நினைவிடத்தை பார்வையிட இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.

மேலும் அங்குள்ள புகைப்படங்களின் அருகில் எழுதப்பட்டுள்ள தகவல்களை படிக்கவும், செல்ஃபி எடுக்கவும் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நினைவிடத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் விதமாக பல்வேறு புகைப்படங்கள், ஆடியோ, வீடியோ பதிவுகள் வைக்கப்பட்டுள்ளன.

Views: - 14

0

0