வரலாறு காணாத புதிய உச்சம்: ரூ.105ஐ தொடும் பெட்ரோல், ரூ.100ஐ கடந்த டீசல்…!!

Author: Aarthi Sivakumar
24 October 2021, 8:14 am
Speed Petrol Rate -Updatenews360
Quick Share

சென்னை: பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத விலை உயர்வை சந்தித்து வருவது வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கடந்த மாதம் இறுதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. பெட்ரோலை பொறுத்தவரையில், கடந்த ஆகஸ்டு மாதத்தில் விலை குறைந்த நேரத்தில் ஒரு லிட்டர் ரூ.100க்கு கீழ் சென்று, விலை உயரத்தொடங்கியது.

மீண்டும் ரூ.100ஐ கடந்து, தற்போது ஒரு லிட்டர் ரூ.104 என்ற விலையில் விற்பனை ஆகிறது. அதேபோல், டீசல் விலை பெட்ரோலை விட கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தினமும் பெட்ரோலை காட்டிலும் டீசல் விலை உயர்வுதான் அதிகமாக இருக்கிறது.

அதன்படி, நேற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் 103 ரூபாய் 92 காசுக்கு விற்பனையான பெட்ரோல், நேற்று லிட்டருக்கு 30 காசு அதிகரித்து, ஒரு லிட்டர் 104 ரூபாய் 22 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது.

டீசல் விலை நேற்று முன்தினம் 99 ரூபாய் 92 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று அதன் விலையில் லிட்டருக்கு 33 காசு உயர்ந்து, 100 ரூபாய் 25 காசுக்கு விற்பனை ஆனது. இந்த தொடர் ஏறுமுகம் காரணமாக, பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டு இருக்கிறது.

இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு 30 பைசா அதிகரித்து, ரூ.104.52 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 34 பைசா அதிகரித்து ரூ.100.59 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

Views: - 955

0

0