அரசு சத்துணவில் பிளாஸ்டிக் அரிசி…வயிற்று வலியால் துடித்த மாணவர்கள்: பள்ளியை ரவுண்டு கட்டிய ஊர்மக்கள்..!!

Author: Aarthi Sivakumar
24 September 2021, 6:13 pm
Quick Share

கிருஷ்ணகிரி: கெலமங்கலம் அருகே சத்துணவு கூடத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்துள்ளதாக பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 Plastic rice in government food ... shocked villagers!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேனிகனிக்கோட்டை அருகே உள்ள கெலமங்கலம் ஒன்றியத்துக்குட்பட்ட ஜெ.காருப்பள்ளி கிராமத்தில், அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்கு ஜெ.காருப்பள்ளி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மாணவர்கள் படிக்கின்றனர்.

இந்நிலையில் அந்தப் பள்ளியில் வழங்கப்படும் சத்துணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு அவ்வப்போது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து ஆலோசித்த கிராமமக்கள் சத்துணவு அரிசியின் மூலம் ஒரு வேளை இப்படி ஏற்பட்டிருக்கலாமோ என சந்தேகித்துள்ளனர்.

 Plastic rice in government food ... shocked villagers!

இதனையடுத்து, பள்ளி சத்துணவு கூடத்தில் இருந்து, மாணவர்களுக்கு வழங்கிய அரிசி வழக்கத்தை விட நிறம் மாறுதலாகவும், நீரில் கழுவும்போது பிளாஸ்டிக் போல் ஒட்டிக் கொள்வதாகவும், அரிசியை சமைத்து சாப்பிட்ட மாணவருக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது.

மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு, சத்துணவு அமைப்பாளரிடம் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து, தேன்கனிக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர் முறையான பதிலளிக்காத நிலையில், கெலமங்கலம் பி.டி.ஓ., தமிழரசனிடம் கேட்டபோது, மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது செறிவூட்டப்பட்ட அரிசி. அது எப்படி இந்த குடோனில் வந்தது என தெரியாது. இது குறித்து, மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு வழங்கிய அந்த அரிசியை முழுவதும் திரும்ப பெற்று, அதற்கு பதிலாக வேறு அரிசி வழங்கப்படும் என தெரிவித்தார்.

அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கலப்பட அரிசியால் ஏராளமான மாணவர்கள் வயிற்று வலி, வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 278

0

0