கால்ல கூட விழறோம்.. தயவு செய்து எங்களை கட்சியில் சேர்த்துக்கோங்க : இபிஎஸ்க்கு ஓபிஎஸ் ஆதரவாளர் கோரிக்கை!
Author: Udayachandran RadhaKrishnan21 July 2025, 9:38 am
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் அஇஅதிமுக உரிமை மீட்பு குழு சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் காஞ்சிபுரம் அடுத்த கருக்குபேட்டை பகுதியிலுள்ள ஓர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் இணைஇணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம்,துணை ஒருங்கிணைப்பாளர் பி.எச்.பாண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று சிறப்பாக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு சிட்டிசன் வாட்ச்சினை அன்பளிப்பு பரிசாக வழங்கி கெளரவித்து,பின்னர் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் பல்வேறு ஆலோசணைகளை வழங்கி சிறப்புரையாற்றி பேசினர்.
இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் 10தீர்மானங்களை நிறைவேற்றி பேசுகையில், அதிமுகவுடன் இணைவதற்கான அனைத்து வகையான போராட்டங்களை நாங்கள் முன்னெடுத்து விட்டோம்,ஆனால் இறுதியாக இது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே உள்ளது என்றும்,ஆகையால் எடப்பாடியார் காலிலே கூட விழுகிறோம்,எங்களை தயவு செய்து சேர்த்துக்கொள்ளுங்கள்.
அதிமுகவுடன் ஓபிஎஸ்யை இணைத்துக் கொள்ளாமல் போனால் வருகிற 2026-ல் மூன்றெழுத்து உள்ள கட்சி தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என திமுகவையோ அல்லது நடிகர் விஜய்யின் தவெக கட்சியையோ சூசகமாக குறிப்பிட்டு பேசியது கூட்டத்தில் இருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
