வேலை வெட்டிக்கு போகாததால் தகராறு : மனைவியை கொலை செய்து தலைமறைவான கணவனை கைது செய்த போலீசார்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2022, 5:13 pm
Husband kills Wife - Updatenews360
Quick Share

கோவை : வேலைக்கு செல்லாமல் பொழுதை கழித்ததால் ஏற்பட்ட தகராறில் மனைவியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் நேரு பூங்கா வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கணேசன் (வயது 55). இவர் சிங்காநல்லூர் திருச்சி சாலை சந்திப்பில் உள்ள ஒரு பேக்கரில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

இவருடைய மனைவி பொன்னுத்தாய் (வயது 46). இவர்களுக்கு மதன்குமார் (வயது 24), அருண்குமார் (வயது 18) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மதன்குமார் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இளைய மகன் அருண்குமார் சின்னவேடம்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கணேசனுக்கும் அவருடைய மனைவி பொன்னுத்தாயிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கணேசன் கடந்த 2 வாரமாக சரிவர வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. நேற்றும் வழக்கம்போல் கணேசன் வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த கணேசன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பொன்னுத்தாயை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த பொன்னுத்தாய் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

பின்னர் கணேசன் அங்கு இருந்து தப்பி சென்றார். இதற்கிடையே வெளியே சென்று விட்டு வீடுதிரும்பிய மகன் மதன்குமார்,அங்கு தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறினார்.

அப்போது அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்தனர். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த கணேசனை கைது செய்தனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாளையும் கைப்பற்றினர். குடும்ப தகராறில் மனைவியை கணவர் வெட்டி கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 764

0

0