ரூம் போட்டு சீமான் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டம்? தபெதிகவினர் மீது போலீசார் ஆக்‌ஷன்!

Author: Hariharasudhan
25 February 2025, 11:15 am

சென்னையில், சீமானின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசத் திட்டமிட்டதாக தபெதிகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை: கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. திமுக – நாதக என இருமுனைப் போட்டி நிலவிய இந்தத் தேர்தலின் பரப்புரையின் போது, பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாகப் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து, சீமானின் இந்தப் பேச்சுக்கு திராவிடர் கழகத்தினர், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட பெரியாரிய அமைப்புகள், தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர். மேலும், சீமான் தனது பரப்புரையின் போது, “பெரியார் வைத்திருப்பது வெங்காயம். என் தலைவன் வைத்திருப்பது வெடிகுண்டு. பெரியாரின் வெங்காயத்தை வீசுபவர்கள் மீது நான் வெடிகுண்டு வீசுவேன” எனப் பேசியது சர்ச்சையை கிளப்பியது.

இந்தப் பேச்சுகளுக்காக சீமான் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கி இருந்த தபெதிகவினர், பெட்ரோல் குண்டு வீசத் திட்டமிட்டு, நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்குச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.

TPDK Vs Seeman

அப்போது, அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து பெட்ரோல் குண்டு தயாரிப்பு தொடர்பான சில பொருட்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். இதன்படி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த குமார் உள்பட 10 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அடிமேல் அடியெடுத்து வைக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து பேசியது சர்ச்சையான நிலையில், அவரது வீட்டை நோக்கி தபெதிகவினர் திரண்டு போராட்டம் நடத்தினர். மேலும், அவர் மீது தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!