ஆந்திராவுக்கு கடத்தப்படவிருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Author: Udayaraman
1 August 2021, 4:29 pm
Quick Share

தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு ரயில் மூலம் கடத்தப்படவிருந்த 1,200 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அரக்கோணம் ரயில் நிலையம் வழியாக செல்லும் ரெயிலில் ரேசன் அரிசி கடத்துவதாக ரயில்வே பாதுகாப்பு படை இளநிலை உதவி ஆய்வாளர் ஜார்ஜ் ஸ்டீபனுக்கு வந்த ரகசிய தகவலையடுத்து ரயில்வே போலீசார் அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் வழியாக வந்துகொண்டிருந்த மின்சார ரயிலில் தக்கோலம் அருகே திடீர் சோதனை நடத்தினர். அப்போது பயணிகளின் இருக்கைகளுக்கு கீழ் மறைத்து வைக்கபட்டிருந்த சுமார் 1200 கிலோ இடைகொண்ட ரேஷன் அரிசி கடத்தப்படுவது கண்டறியப்பட்டது. ரயில்வே காவல்துறையினர் சோதனை செய்வதை கண்ட அரிசி கடத்தல்காரர்கள் தலைமறைவாயினர்.மின்சார ரயிலில் கடத்தப்பட்ட 1200 கிலோ அரிசியை உதவி ஆய்வாளர் ஜார்ஜ் ஸ்டீபன் தலைமையில் பறிமுதல் செய்து ரயில் மூலம் காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்திற்கு கொண்டுவந்தனர்.

காஞ்சிபுரம் குடிமைப்பொருள் வட்ட வழங்கல் வட்டாட்சியர் வாசுதேவனுக்கு தகவல் அளித்ததன் பேரில் வட்ட வழங்கல் அலுவலர்கள் ரயிலிலிருந்த அரிசியை கைப்பற்றி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், அரிசி கடத்தல்காரர்களிடம் இருந்து ஒரு கிலோ அரிசி 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை கமிஷன் கொடுத்து மொத்த விலை வியாபாரிகள் ரேஷன் அரிசியை வாங்கி ஆந்திரா மாநிலங்களில் உள்ள தனியார் அரிசி ஆலை மில் உரிமையாளர்களிடம் ரூ 15 முதல் 20 ரூபாய் கொடுத்து பாலிஷ் செய்து ரேஷன் அரிசியை கிலோ 40 முதல் 50 ரூபாய்க்கு விற்று லாபம் சம்பாதிப்பதால் மின்சார ரயிலில் ரேஷன் அரிசி அதிக அளவு கடத்த தொடங்கியுள்ளனர் .இந்த கடத்தலுக்கு ஒரு சில ரேஷன்கடைக்காரர்களே மறைமுகமாக சில நபர்களை வைத்து கடத்தலில் ஈடுபட்டுள்ளார்கள் எனக் கூறினர்.

Views: - 84

0

0