மறுத்த கோர்ட்.. பறந்த கஸ்தூரி.. 2 தனிப்படைகள் அமைப்பு!

Author: Hariharasudhan
14 November 2024, 2:07 pm

நடிகை கஸ்தூரிக்கு முன்ஜாமீன் வழங்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு மறுத்த நிலையில், அவரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

மதுரை: சென்னையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிராமணர்களுக்கான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, தெலுங்கு பேசும் பெண்கள் மற்றும் திராவிடர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த வகையில், இது தொடர்பாக நடிகை கஸ்தூரி மீது மதுரை நாயுடு மகாஜன சங்கம் சார்பிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் திருநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி நடிகை கஸ்தூரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (நவ.12) இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்டை மாநிலத்துடன் பிரச்னை ஏற்படும் வகையில், நடிகை கஸ்தூரி அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததால், அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என அரசுத் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

bench

இதனைத் தொடர்ந்து, இன்று தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்து விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று (நவ.14) காலை தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அரசுத் தரப்பு முன்ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்து தீர்ப்பு அளித்தார்.

இதையும் படிங்க: ரஜினியை பந்தாடிய லைக்கா..இனி உங்க சகவாசமே வேணாம் டா சாமி ..!

இதனிடையே, தன்னை போலீசார் தேடுவதை அறிந்த நடிகை கஸ்தூரி தலைமறைவாகி உள்ளார். மேலும், அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் ஆகி இருப்பதால் போலீசார் இரண்டு தனிப்படைகள் அமைத்து கஸ்தூரியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அது மட்டுமல்லாமல், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம் நடிகை கஸ்தூரி எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்பதும் உறுதியாகி உள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!