எம்எல்ஏ தோட்டத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிப் படுகொலை.. நடந்தது என்ன?!
Author: Udayachandran RadhaKrishnan6 August 2025, 10:45 am
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு மூர்த்தி என்பவரும் அவரது மகன்கள் தங்கபாண்டியன், இளைய மகன் மணிகண்டன் என்பவர்களும் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
மூன்று பேரும் நேற்று இரவு மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் தங்கபாண்டி, மணிகண்டன் சேர்ந்து தனது தந்தை மூர்த்தியை கடுமையாக தாக்கியுள்ளனர்.
இது குறித்து அருகில் இருந்தவர்கள் காவல் அவசர உதவி எண் 100க்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர் இதனை தொடர்ந்து குடிமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் அந்தப் பகுதி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்ததால் அவருக்கு முதல் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற உதவி ஆய்வாளர் சண்முகவேல் தந்தை மகன் சண்டையை பிரித்துள்ளார். போலீசார் வந்ததை பார்த்த மணிகண்டன் தோட்டத்தில் சென்று பதுங்கி கொண்டார்.
காயமடைந்த திருத்த மூர்த்தியை ஆம்புலன்சில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளார். மேலும் மூர்த்தி தங்கபாண்டி புகைப்படங்களை எடுத்து காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இருவரிடமும் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்த போது மறைந்திருந்த மணிகண்டன் உதவி ஆய்வாளரை வெட்டி பாய்ந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சண்முகவேல் தப்பிக்க முயன்று ஓடி உள்ளார். ஆத்திரத்தில் இருந்த தங்கபாண்டியும் தந்தை மூர்த்தியும் துரத்தி சென்றுள்ளனர்.

போதையில் இருந்த 3 பேரும் சேர்ந்து உதவி ஆய்வாளரை வெட்டி கொலை செய்தனர். உடன் இருந்த ஓட்டுனரையும் துரத்திச் சென்றுள்ளனர். அவர் ஓடி தப்பி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.
விரைந்து வந்த குடிமங்கலம் போலீசார் தப்பிச் சென்ற தந்தை மூர்த்தி மகன்கள் தங்கபாண்டி, மணிகண்டன் என மூன்று பேரையும் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மூர்த்தியின் மனைவி மற்றும் மருமகளை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக உடுமலை டிஎஸ்பி நமச்சிவாயம் மற்றும் பல்லடம் டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் மரத்துக்குளம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரனிடம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
