40 ஆண்டுகளாக தமிழக மக்களை அரசியல் கட்சிகள் ஏமாற்றி வருகிறது : விழுப்புரம் நா.த.க வேட்பாளர் மு.களஞ்சியம் விமர்சனம்!

Author: Udayachandran RadhaKrishnan
7 March 2024, 1:21 pm

40 ஆண்டுகளாக தமிழக மக்களை அரசியல் கட்சிகள் ஏமாற்றி வருகிறது : விழுப்புரம் நா.த.க வேட்பாளர் மு.களஞ்சியம் விமர்சனம்!

விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் லோக்சபா தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் தொகுதி வேட்பாளராக திரைப்பட இயக்குநர் மு.களஞ்சியம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இதனை யடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எங்கள் கட்சியின் கொள்கை, தத்துவத்துக்கு நெருக்கமாக அமைந்த கரும்பு விவசாயி சின்னத்தை திட்டமிட்டு பறித்துள்ளனர். எங்களுக்கு சின்னம் முக்கியமல்ல, சீமான் தான் அடையாளம்.

திட்டமிட்டு எங்கள் வளர்ச்சியை தடுக்கும் விதத்தில், சின்னத்தை பறித்தவர்களுக்கு, இந்த லோக்சபா தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவர். பிற கட்சிகளை போல் நாங்கள் தேர்தலுக்காக கூட்டணி பேசவில்லை, செலவுக்கான தொகையை கேட்கவில்லை.

மக்களை நம்பி தனித்து போட்டியிடுகிறோம். எங்கள் வேட்பாளர்கள் அரசியல் பின்ணணியோ, பணக்காரர்களோ இல்லை. சாதாரண ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். நானும் கூலி தொழிலாளி குடும்பத்தை சேர்ந்தவன்.

சென்னையிலும், தென் மாவட்டங்களிலும் மழை வெள்ளத்தின்போது, ஆளும் கட்சி அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்ஏக்கள் போவில்லை. எதிர்கட்சி தரப்பினரும் போகவில்லை. சீமான் தான், 25 நாள்கள் மக்களுடன் இருந்து உதவிகளை செய்தார்.

நாம் தமிழர் கட்சி கூட்டத்துக்கு அதிகளவில் மக்கள் கூடுகின்றனர். பிற கட்சியை போல் பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கவில்லை. தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக நாம் தமிழர் கட்சி வளர்ந்துள்ளது. அந்த இடத்தை பிடிக்க விரும்பினால், மக்களுக்காக இறங்கி பாடுபட வேண்டும், அதை விடுத்து சின்னத்தை பறிப்பது போன்ற செயல் சரியல்ல.

தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி வைத்து 40 ஆண்டுகாலமாக ஏமாற்றி வருகிறது. அவர்களிடமிருந்து மக்களை மீட்கவே நாங்கள் பணியாற்றுகிறோம். தனித்து நிற்பதால் மக்கள் மனதில் இடம் பிடிப்போம். இப்போது மூன்றாவது இடம், படிப்படியாக முதலிடத்தை பிடிக்க உழைக்கிறோம் என்றார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!