வருகிற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கட்சி தனித்துப் போட்டி: பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்பு…

25 August 2020, 11:03 pm
Quick Share

தூத்துக்குடி: இ-பாஸ் விவகாரத்தில் மாநில அரசாங்கம், மத்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதலை கடைப்பிடிப்பது எல்லோருக்கும் நல்லதாக இருக்கும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் சக்தி கேந்திர கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு அதிக வாக்குகள் பெற்று பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெற வைப்பது குறித்த தேர்தல் ஆலோசனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மத்திய அரசாங்கத்தைப் பொறுத்த வரைக்கும் கரோனாவுக்கு சில வழிகாட்டுதலை சொல்லியுள்ளது. எல்லா மாநிலங்களிலும் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு செல்லக்கூடிய இ-பாஸ் முறையை ரத்து செய்வது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற வகையிலும் மக்களை கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய அன்றாட வாழ்க்கைக்கு திரும்பும் வகையிலும் ரத்து செய்துள்ளது. ஆனால் கரோனா பரவல் தீவிரமாக உள்ளதால் மாநில அரசு அதை நடைமுறைப்படுத்த யோசிப்பதாக தெரிகிறது. பொதுவாக மாநில அரசாங்கம் மத்திய அரசாங்கத்தின் வழிகாட்டுதலை கடைப்பிடிப்பது எல்லோருக்கும் நல்லதாக இருக்கும்.

ஸ்டெர்லைட் தொழிற்சாலை வரக்கூடாது என்பதற்காக ஆரம்பத்தில் உண்ணாவிரதம் இருந்தவன் நான்‌. ஆனால் பொதுமக்களுக்கு எது நல்லது தொழிலாளர்களுக்கு எது நல்லது இந்த இரண்டையும் மனதில் வைத்துக்கொண்டு அரசு முடிவு எடுப்பது சரியாக இருக்கலாம். வெளியே வேறு ஏதாவது விஷயத்தை மனதில் வைத்துக்கொண்டு முடிவெடுப்பது சரியாக இருக்காது என்பது என்னுடைய கருத்து. நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்களிப்பதால் எதும் மாறப்போகிறதா?. நம்முடைய மாணவர்களை தகுதி படைத்தவராக மாற வேண்டும்.

அதற்கு தக்கபடி அவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும். மத்திய அரசாங்கமும், நீட் தேர்வு நடத்தக் கூடியவர்களும் இந்த சூழ்நிலை தெரியும். எனவே இதில் நீக்குப் போக்காக இருப்பார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். பாரதிய ஜனதா கட்சியில் அங்கம் வகிக்கக்கூடிய அரசாங்கம் 2021 வந்தே தீரும். இதில் இரண்டாவது கருத்து தேவையில்லை. வருகிற சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கட்சி தனித்துப் போட்டியிடவே தொண்டர்கள் விரும்புகிறார்கள் என பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தது பாராட்டக்கூடிய ஒன்று என்றார்.

Views: - 23

0

0