சொன்ன பேச்சை கேளுங்க…! இல்லை என்றால் ஊரடங்கு தான்..! முதலமைச்சர் அதிரடி

8 August 2020, 8:52 pm
Narayanasamy updatenews360
Quick Share

புதுச்சேரி: அரசின் பேச்சை மக்கள் கேட்கவில்லை என்றால், ஊரடங்கை மீண்டும்  நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறி உள்ளார்.

தமிழகத்தை போன்று புதுச்சேரியிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அரசியல் பிரமுகர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள் என அனைத்து தரப்பினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தொடர்ந்து அரசு தரப்பில் இருந்து பல  கட்டுப்பாடுகள், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கொரோனா தாக்கம் குறையவில்லை. இந் நிலையில், ஊரடங்கை மீண்டும்  நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறி இருப்பதாவது: புதுச்சேரியில்  ஒரு வாரமாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. அதிகளவு பரிசோதனைகள் மூலமாக தான் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக கண்டறிய முடியும்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளின் இருப்பிடங்களுக்கு மருத்துவக் குழு சென்று தினமும் சோதனை செய்து வருகிறது. அவர்களுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர்.

மக்கள் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும், கூட்டமாக எங்கும் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மக்களிடம் ஒத்துழைப்பு இல்லை. அவர்களுக்கு கொரோனாவின் பாதிப்பு புரியவில்லை.

2 மாதங்களாக கொரோனாவின் வேகம் அதிகம். செப்டம்பர் வரை செல்லும் என்று நினைக்கிறேன். அரசின் பேச்சை மக்கள் கேட்கவில்லை எனில்,  ஊரடங்கு உத்தரவு மீண்டும் புதுச்சேரியில் அமலாகும் நிலை ஏற்படும் என்று கூறினார்.