கோவையில் குடிநீர், சாக்கடை, சாலை வசதியை மேம்படுத்த முன்னுரிமை வழங்கப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி..!!

Author: Rajesh
26 February 2022, 3:47 pm
Quick Share

கோவை: கோவையில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை விரைவு படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர்களுடனான ஆலோசனை கூட்டம் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் சட்டமன்ற தொகுதி வாரியாக, காளப்பட்டி கெட்டிமேளம் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.

இதில், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், மாநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா ஆர்.கிருஷ்ணன், எம்பி சண்முகசுந்தரம், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது, திமுக.,வுக்கு மகத்தான வெற்றியை வாக்காளர்கள் வழங்கி உள்ளனர். அதிமுக ஆட்சியில் எந்தவித அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட வில்லை. குடிநீர், சாக்கடை, சாலை வசதியை மேம்படுத்த முன்னுரிமை வழங்கப்படும்.

தொகுதிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகின்றது. இதில், எவ்வாறு மக்கள் பணியாற்ற வேண்டும் என கவுன்சிலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கான பணிகள் திட்டமிடுதல் எடுத்துகொள்ளப்பட உள்ளது. இதற்காக முதலமைச்சரிடம் சிறப்பு நிதி பெற உள்ளது.
நன்றி என்பது வார்த்தையாக இல்லாமல் திட்டங்கள் மூலம் மக்களுக்கு நன்றியை செலுத்த உள்ளோம்.

அதிமுக ஆட்சியில் திட்டங்களுக்கு வர உள்ள நிதிகள் வேறு பணிக்கு பயன்படுத்தப்பட்டது. தூய்மையான நிர்வாகத்தை வழங்க உள்ளோம். நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல் வெளிப்படை தன்மையுடன் நடைபெற்றது. இதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. ரூ.234 கோடி வளர்ச்சி திட்டங்களுக்காக தனது தொகுதியாக நினைத்து முதலமைச்சர் கோவைக்கு வழங்கியுள்ளார்.

தமிழக முதல்வரின் பிறந்தநாளை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வாரியாக விளையாட்டு போட்டிகள் நடத்தி சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளை விரைவு படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தை பொறுத்த வரை கடந்த ஆட்சியில் புதிய மின் உற்பத்தி முயற்சிகள் எடுக்கப்பட வில்லை. முதல்வரின் ஆலோசனையின் பேரில் மாவட்டந்தோறும் மின் பூங்கா வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக திருவாரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Views: - 373

0

0