கடனை திரும்ப கேட்டு குடும்பத்தை தகாத வார்த்தையில் பேசிய தனியார் வங்கி ஊழியர்கள் : மனமுடைந்து தற்கொலை செய்த 7ம் வகுப்பு மாணவன்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2022, 7:27 pm
7th Student Suicide - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : கடனை திரும்ப கேட்டு தகாத வார்த்தைகள் பேசி தன்னை தனியார் வங்கி ஊழியர்கள் தாயை மிரட்டியதால் மனமுடைந்து மகன் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அடுத்த அஞ்சாலி பகுதியை சேர்ந்தவர்கள் சசிக்குமார்- இந்திரா ராணி தம்பதியர். இதில் கணவர் சசிக்குமார் வெளிநாட்டில் கொத்தனார் வேலை பார்த்து வரும் நிலையில் இந்திரா ராணி தனது இரு மகன்களுடன் சொந்த ஊரில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 22-ம் தேதி செவ்வாய் கிழமை அன்று தனது மூத்த மகன் ஷபரூன் சத்தம் போடுவதை கண்டு வீட்டிற்கு வெளியே தனியார் வங்கி ஊழியர்களிடம் பேசி கொண்டு நின்ற இந்திரா ராணி வீட்டிற்குள் சென்றுள்ளார்.

அப்போது 7-ம் வகுப்பு படிக்கும் அவரது இளைய மகன் ஷ்பபின் வீட்டிற்குள் டவலை கழுத்தில் கட்டி உத்திரத்தில் தூக்கில் தொங்கியபடி நின்றுள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

இந்த நிலையில் தகவல் அறிந்த அங்கு வந்த குளச்சல் போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்து மாணவர் ஷ்பபின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

இதற்கிடையில் தாய் இந்திரா ராணி நேற்று 23-ம் தேதி காவல் நிலையத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தான் நடத்தி வரும் மகளிர் சுய உதவி குழுவிற்காக தக்கலையில் உள்ள தனியார் வங்கியில் (HDFC) ரூ 8-லட்சத்திற்கு கடன் பெற்றுள்ளதாகவும் இந்த மாத தவணை செலுத்தாத நிலையில் , கடந்த 22-ம் தேதி செவ்வாய் கிழமை வீட்டிற்கு வந்த தனியார் வங்கி ஊழியர்கள் தன்னிடம் தன் இரு மகன்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் பேசி தவணை தொகையை உடனடியாக செலுத்த வர்ப்புறுத்தியதாகவும் இதைக்கண்ட தனது இளைய மகன் ஷ்பபின் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும், எனவே எனது மகனின் தற்கொலைக்கு காரணமாக இருந்த வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளித்தார்.

இந்தநிலையில் இன்று பிரேத பரிசோதனைக்கு பின் மாணவன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் போலீசார் தாய் இந்திரா ராணியின் புகார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்க தக்கலை(HDFC) தனியார் வங்கி மேலாளரை தொடர்பு கொண்ட போது அவர் விடுப்பில் சென்று விட்டதாகவும் சம்பவம் குறித்து தான் விளக்கமளிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

Views: - 647

0

0